நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம்

ராசிபுரம் பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணை விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.
நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம்

ராசிபுரம் பகுதியில் நாட்டுக்கோழி வளர்ப்பில் பண்ணை விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

நாமக்கல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பிராய்லர் கோழி வளர்ப்புதான். அந்த அளவுக்கு நாமக்கல் மாவட்டம், முட்டைக் கோழி வளர்ப்பில் நாட்டில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

மேலும் பிராய்லர் ரகக் கோழிகளும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தற்போது இறைச்சிக்காக நாட்டுக் கோழிகளுக்கு அதிக மவுசு உள்ளதால் விவசாயிகளிடையே பண்ணை முறையில் நாட்டுக் கோழி வளர்ப்பில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால், தோட்டங்களில் இட வசதி உள்ளவர்கள் துணைத் தொழிலாக பண்ணைகள் அமைத்து நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கென பிரத்யேக பயிற்சிகளும் கோழி வளர்ப்போருக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

பண்ணை முறை நாட்டுக்கோழி வளர்ப்பு
ராசிபுரம் பகுதியில் ஆர். புதுப்பாளையம், கல்லங்குளம், தேங்கல்பாளையம், புதுப்பட்டி, பட்டணம், சிங்களாந்தபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம் போன்ற பகுதிகளில் இதுபோன்ற பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் அதிக அளவில் நடைபெறுகிறது.

வயல்வெளிகளில் பல்வேறு பயிர்களை வளர்க்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலுடன் கூடிய, குறைந்த நீர் தேவைப்படும் இதுபோன்ற பண்ணை முறை கோழி வளர்ப்பில் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர்.

பிராய்லர் கோழிகளை விட விலை கூடுதலாக இருந்தாலும், நுகர்வோர் மத்தியில் இந்த நாட்டுக் கோழிகளுக்கு அதிக வரவேற்புள்ளது என்றும், இதில் ஈடுபடுவோருக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாகவும் கூறுகின்றனர் நாட்டுக்கோழி வளர்ப்போர்.
-ஆர் .ரமேஷ் கிருஷ்ணன்

லாபம் தரும் நாட்டுக்கோழி
இது குறித்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பையர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த எம்.சி.ஏ. பட்டதாரி எஸ். கோவிந்தராஜ் கூறியதாவது:

நாட்டுக் கோழி வளர்ப்பு நல்ல லாபத்தை ஈட்டித் தரும். இந்த தொழில் ஈடுபடுபவர்கள் விவசாயம், வியாபாரம், தனியார் நிறுவனம், அரசு வேலை உள்ளிட்ட எந்த வகையான வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், கூடுதல் வேலையாக நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபடலாம்.

நாட்டுக் கோழி வளர்ப்புக்கு அதிக இடம் மற்றும் தண்ணீர் வசதிகள் தேவையில்லை. நமது வீடு அமைந்திருக்கும் பகுதியில் சிறிய அளவில் குடில் அமைத்து கோழிகளை வளர்க்கலாம். பிற கோழி இனங்களை விட நாட்டுக் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகம் உண்டு. இதனால், தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டு கோழிகள் இறந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை.

இதையும் படித்தறிந்து கொள்ளலாம்.. பேக்கரி தொழில் வளர்ச்சி


கோழிகளுக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க கோழிகள் வசிக்கும் கூண்டுகளை கிரிமி நாசினிகளைப் பயன்படுத்தி தூய்மையான முறையில் பராமரிக்க வேண்டும்.

கோழிகளின் சிறந்த உணவுப் பொருள்களாக மக்காச்சோளம், கோதுமை, அரிசி, கம்பு, கேழ்வரகு, கருவாடு, சோற்றுக் கற்றாழை, சின்னவெங்காயம், பூண்டு உள்ளிட்டவை கொடுக்கப்படுகின்றன.

நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சிகளுக்கு அசைவ பிரியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும், தமிழக அரசு சார்பில் நாட்டுக் கோழி வளர்ப்புக்கு என்று நிதியுதவிகள் மற்றும் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிருக்கு நூறு சதவீத மானியத்துடன் கோழிக் குஞ்சுகள் கிடைக்கும். விவசாயிகள், தனி நபர்கள், சிறுதொழில் முனைவோர், மகளிர் சுய உதவிக் குழுவினர் அரசு மானியங்களைப் பெற முடியும்.

மகளிர் மற்றும் சிறு தொழில் முனையும் இளைஞர்கள் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com