முதலீட்டுக்கு கர்நாடகம்

சுதந்திரத்துக்குப் பிறகு அரசுத்துறை தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கு தேர்ந்த இடமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்தது கர்நாடகத்தைத்தான்.
முதலீட்டுக்கு கர்நாடகம்

சுதந்திரத்துக்குப் பிறகு அரசுத்துறை தொழில் நிறுவனங்களை அமைப்பதற்கு தேர்ந்த இடமாக இந்திய அரசு தேர்ந்தெடுத்தது கர்நாடகத்தைத்தான். அதனால், இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம் (எச்ஏஎல்), இந்துஸ்தான்மோட்டார் டூல்ஸ் (எச்எம்டி), இந்துஸ்தான் டெலிபோன் இன்டஸ்ட்ரி (ஐடிஐ), பாரத் எலெக்ட்ரானிக் நிறுவனம் (பிஇஎல்), பாரத் எர்த்மூவர்ஸ் லிமிடெட் (பி.இ.எம்.எல்.) போன்ற பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. பூகோள ரீதியாக மட்டுமல்லாமல், தரைவழி, ரயில்வழி, விமானவழி தொடர்பு, சந்தை தொடர்பு, மூலப்பொருள்கள், மின்சாரம், தண்ணீர், உள்கட்டமைப்பு வசதி போன்ற அனைத்துவசதிகளும் கர்நாடகத்தில் குவிந்துள்ளன. பெங்களூரு மட்டுமல்லாது, மைசூரு, மங்களூரு, ஹுப்பள்ளி, கலபுர்கி, விஜயபுரா, பீதர், பெல்லாரி, தும்கூரு, கோலார், சித்ரதுர்கா போன்ற நகரங்களும் தொழில்வளர்ச்சியில் சிறந்துவிளங்குகின்றன.

1990-களில் தாராள பொருளாதார கொள்கை வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டப்போது அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட மாநிலம் கர்நாடகம். அதிலும் பெங்களூரு மாநகரின் வளர்ச்சி உலக அளவில் உயர்ந்து நின்றது. உலகமே வியக்கும் அளவுக்கு தகவல் மற்றும் உயிரிதொழில்நுட்பத்தில் பெங்களூரு சாதனை படைத்து வருகிறது. தொழில் மற்றும் விவசாய உற்பத்தி தவிர சுற்றுலா, சுகாதாரம், கல்வி போன்ற சேவைத் துறையிலும் கர்நாடகம் சிறந்து விளங்குகிறது.
தாராளமயமாக்கல் திட்டம் அமலுக்கு வந்த 29 ஆண்டுகளில் கர்நாடகத்தில் தொழில் உள்கட்டமைப்பு பலமடங்கு மேம்பட்டுள்ளது. சாலை, மின்சாரம், தண்ணீர், தகவல்தொடர்பு, விமானத்தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கர்நாடகம் தன்னிறைவான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதன்விளைவாக உலக நாடுகளின் பார்வை கர்நாடகத்தின் மீது விழுந்துள்ளது.
உலகின் தலைசிறந்த ஃபார்ச்சூன்-500 நிறுவனங்களில் 87 நிறுவனங்கள் கர்நாடகத்தில் நிலைபெற்றுள்ளன. இன்போசிஸ், விப்ரோ போன்ற தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களை உலகத்துக்குக் கொடையாக அளித்துள்ளது கர்நாடகம்.
கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளில் ஈடுபட ஆர்வமாக பல பன்னாட்டு நிறுவனங்கள் கர்நாடகத்தை நோக்கி படையெடுத்தபோது அந்தத் தொழில் முதலீடுகளை வேலைவாய்ப்பாகவும், பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகவும் பயன்படுத்திக் கொள்ள 2010, 2012, 2016-ஆம் ஆண்டுகளில் உலக முதலீட்டாளர் மாநாடுகள் நடத்தப்பட்டன.
அந்த மாநாடுகள் மூலம் 1,770 நிறுவனங்கள் மூலம் ரூ. 9.81 லட்சம் கோடி முதலீடுகள் திரட்டப்பட்டு, 27.80 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. 
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜக அரசு அமைந்துள்ளது. தொழில் வளர்ச்சிக்கான நல்ல சூழலை உருவாக்க முனைந்த சித்தராமையா தலைமையிலான அரசு, 2019-23-ஆம் ஆண்டுகளுக்கான புதிய தொழில் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. கர்நாடகத்தில் தொழில் முதலீடுகளில் ஈடுபட முன்வரும் நிறுவனங்களுக்கு தாராளமான சலுகைகளை வாரிவழங்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய அளவில் பொருளாதார மந்தநிலை காணப்பட்டாலும், கர்நாடகத்தில் தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குவிந்துள்ளதால், தொழில் முதலீடுகளுக்கு ஆர்வம் குறையாமல் உள்ளது. அதைத் தொழில் முதலீடாக மாற்றி வேலைவாய்ப்புக்கு வழிகாண வேண்டும் என முடிவு செய்துள்ள கர்நாடக அரசு, அதற்காக 2020-ஆம் ஆண்டில் ஜனவரி 16-18-ஆம் தேதிகளில் பெங்களூரு, அரண்மனை மைதானத்தில் "முதலீட்டுக்கு கர்நாடகம்-2020' (Invest Karnataka-2020) என்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது. ஆட்டோமொபைல், விமானம், மெஷின் டூல்ஸ், ராணுவம், கனரக பொறியியல், விவசாயம் மற்றும் உணவு பதனிடுதல், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல், சுற்றுலா, தகவல் மற்றும் உயிரித்தொழில்நுட்பம், மருந்து மற்றும் மருந்துப் பொருள்கள், மின்னணுவியல் மற்றும் குறைக் கடத்தி உற்பத்தி, உள்கட்டமைப்புத் திட்டங்கள், தனியார் தொழில் பூங்காக்கள், நவீன நகரியங்கள் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கர்நாடகத்தில் தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு தகுந்த சூழலை கர்நாடக அரசு உருவாக்கி தந்துள்ளது. தொழில்முதலீடுகளுக்கு விண்ணப்பிக்கும் முறை இணையவழியே நடக்கிறது. எந்த இடைத்தரகரும் இல்லாமல் தொழில்நிறுவனங்களை அமைக்க நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை கர்நாடக அரசே முன்னின்று வழங்குகிறது. எல்லா ஒப்புதல்களும் இணையதளம் வழியே நடக்கின்றன. நிலம் கொள்முதல் செய்வதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. தொழில் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படுகின்றன. கர்நாடகம் தழுவிய தொழில்பேட்டைகளில் காலிநிலங்கள் 1 லட்சம் ஏக்கர் அளவுக்கு உள்ளன. விமானவியல் தொழில்பூங்காக்கள், ஜவுளிதொழில்பூங்கா, உணவுத்தொழில்பூங்கா போன்ற தொழில்ரீதியான தொழில்பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் புதிய தொழில் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் குவிந்துள்ளன.
- ந. முத்துமணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com