மூலிகை சோப்பு தயாரிப்பு

இன்றைய நாகரிக காலத்தில் சுகாதார சீர்கேட்டினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரும நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு முற்றிலும்
மூலிகை சோப்பு தயாரிப்பு

இன்றைய நாகரிக காலத்தில் சுகாதார சீர்கேட்டினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சரும நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதைக் கருத்தில் கொண்டு முற்றிலும் மூலிகைகளைப் பயன்படுத்தி குளியல் சோப்புகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வருகின்றன.
 அந்த வகையில் சேலத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ஆர்.கெளரி (33) மூலிகை சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நெத்திமேடு பகுதியில் வசித்து வரும் இவரைச் சந்தித்தபோது:
 ஆரம்ப காலத்தில் எனது குடும்பத்தினருக்கு தோல் சம்பந்தமான ஒவ்வாமை நோய் ஏற்படவே சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றேன். ஒவ்வாமையானது ரசாயனம் கலந்த சோப்புகளைப் பயன்படுத்துவதன் மூலமே ஏற்படுகின்றது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல் மற்றவர்களும், குறிப்பாக குழந்தைகளும் பாதிக்கப்படக் கூடாது என எண்ணி இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முயற்சித்தேன். இதைத் தொடர்ந்து பல்வேறு சரும நிபுணர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகே மூலிகை குளியல் சோப்புகளைத் தயாரிக்க எண்ணினேன்.
 உடனடியாக தனியார் சோப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நேரில் சென்று முதலில் சோப்பு தயாரிக்கும் முறை குறித்துப் பயிற்சி பெற்றேன். பின்னர், மூலிகைகள் மூலம் சோப்பு தயாரிப்பது குறித்து பல்வேறு சித்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றேன். அதன் பிறகே இந்த முயற்சியில் இறங்கினேன்.
 சருமத்தின் பி.எச். நிலை, சருமத்தின் வறட்சி நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கற்றாலை, வேம்பு, குங்குமப்பூ, மஞ்சள் போன்ற மூலிகைகளைக் கொண்டு 15 வகையான சோப்புகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். மேலும் இவை சொரியாஸிஸ் நோயினால் ஏற்படும் அரிப்பு, தோல் வறட்சி, சருமத்தில் ஏற்படும் தேமல் ஆகியவற்றை குணப்படுத்தும். இந்த சோப்புகளை தோல் நோய்களால் அவதிப்படுவோர் மட்டுமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இதனால் சருமத்தில் உள்ள வியர்வை துவாரங்கள் திறக்கப்பட்டு, செல்கள் புதுப்பிக்கப்பட்டு, ஈரப்பதத்துடன் சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்க உதவும்.
 இவ்வாறு தயாரிக்கப்படும் சோப்புகளை நாகர்கோவில், சென்னை, ஈரோடு போன்ற வெளியூர்களிலிருந்தும், பெங்களூரு போன்ற நகரங்களிலிருந்தும் வந்து பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். மேலும் இந்த சோப்புகள் மிகவும் குறைந்த விலையில் ரூ. 50 முதல் ரூ. 120 வரை விற்கப்படுகின்றன. பொதுமக்கள் தற்போது செயற்கை பொருள்களை விட இயற்கை பொருள்களையே அதிகம் உபயோகித்து வருகின்ற நிலையில், இவற்றை உபயோகித்த உடனே பயன் தரும் என்று மக்கள் நினைப்பது மிகவும் தவறாகும்.
 சொரியாஸிஸ் போன்ற தோல் நோய்களால் சருமத்தில் ஏற்படும் அரிப்புக்கு இந்த சோப்புகள் மற்றும் இயற்கை மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்தினால் மட்டுமே பலன் காண முடியும். ஏனெனில், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் சோப்புகள் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு உடனடியாக இந்த சோப்புகளைப் பயன்படுத்தும்போது தோலின் செல்களும் அதற்கு தகுந்தவாறு மாற்றம் அடைவதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம்.
 ஆனால், தற்போதைய தலைமுறை இயற்கை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பெற்று வருவதால் ஏராளமானோர் இந்த மூலிகை குளியல் சோப்புகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால், வீட்டிலிருக்கும் பெண்கள் குறைந்த செலவில் மாதம் ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வருமானம் பெற முடியும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் செயற்கை பொருள்களையே மக்கள் உபயோகித்து வந்தாலும் இனி வருங்காலம் இயற்கையை சார்ந்தே அமையும் என நம்புகிறேன் என்றார்.

மூலிகைகளை பயன்படுத்தி இயற்கை முறையில் குளியல் சோப்பு மற்றும் பல்பொடி தயார் செய்யும் ஆர். கௌரி.
 எஸ். ஷேக் முகமது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com