விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் முன்னிலை: குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா

இந்தியாவில் விவசாயத் தொழிலுக்கு அடுத்து, கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை அளித்து தருவது நெசவுத் தொழில்.
விசைத்தறி ஜவுளி உற்பத்தியில் முன்னிலை: குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா

இந்தியாவில் விவசாயத் தொழிலுக்கு அடுத்து, கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை அளித்து தருவது நெசவுத் தொழில்.
 பாரம்பரியம் மிக்க கைத்தறிகளில் உற்பத்தியாகும் ஜவுளிகள், தேவையைப் பூர்த்தி செய்யமுடியாத நிலை ஏற்பட்டபோது, விசைத்தறி ஜவுளி உற்பத்தியின் தேவை அவசியம் எனும் நிலை உருவானது.
 உள்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்த விசைத்தறி ஜவுளிகள், ஏற்றுமதியைக் நோக்கிச் சென்றபோது பன்னாட்டுப் போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் தரமானதாகவும், விரைவாகவும் உற்பத்தி செய்வதற்கு விசைத்தறிகளை மேம்படுத்துவது அவசியம் ஆனது.
 இதனால், ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கவும், சர்வதேசப் போட்டிக்கு விசைத்தறியாளர்களைத் தயார் செய்யும் நோக்கில் நாடெங்கும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தொழில்முனைவோர் பங்களிப்புடன் ஜவுளிப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.
 நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இரு அதிநவீன நெசவுப் பூங்காக்கள் அமையப் பெற்றன. குமாரபாளையத்தை அடுத்த அருவங்காடு பகுதியில் "குமாரபாளையம் உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா' மற்றும் வளையக்காரனூரில் "காவேரி உயர்தொழில் நுட்ப நெசவுப் பூங்கா' என இரு ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
 கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட குமாரபாளையம் ஹைடெக் வீவிங் பார்க்கில் 30 ஏக்கர் பரப்பளவில் 56 தறிக் கூடங்கள், ஸ்பின்னிங், வைண்டிங், தொழிலாளர்கள் ஓய்வறை, ஏற்றுமதியாளர்கள் கலந்தாய்வு அறை என பல்வேறு வசதிகளுடன் அமையப் பெற்றுள்ளது. மேலும், அதிவேகமாக ஜவுளி உற்பத்தி செய்யும் நாடா இல்லாத நவீனத் தறிகள் நிறுவப்பட்டு, ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நூறு சதவீதம் ஏற்றுமதிக்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள் இங்கு அதிகளவில் உற்பத்தியாகின்றன.
 

இப் பூங்காவின் தலைவர் எல்.ஏ.டி. பழனிசாமி, துணைத் தலைவர் எஸ். சேகர் மற்றும் நிர்வாக இயக்குநர்களாக 7 பேர் உள்ளனர். மத்திய ஜவுளித் துறை அதிகாரிகள் ஜவுளி பூங்காவில் அவ்வப்போது ஜவுளிக் கொள்கைக் குறித்துத் தெரிவித்து, விசைத்தறியாளர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர்.
 காவேரி உயர்தொழில்நுட்ப நெசவுப் பூங்கா, 40 ஏக்கர் பரப்பளவில் 33 விசைத்தறி கூடங்களுடன் தொடங்கப்பட்டது. இந்தப் பூங்காக்களில் ஏற்றுமதி ரகங்கள் அதிக அளவில் உற்பத்தியாவதோடு உள்நாடு மற்றும் வெளிநாட்டு ஆர்டர்களுக்கு ஏற்ப 50 முதல் 80 இஞ்ச் அகலம் கொண்ட துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
 ஜவுளி உற்பத்திக்கு மட்டுமல்லாமல் இந்தப் பூங்காக்களில் நெசவு மற்றும் நெசவு சாராத தொழில்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
 இதுகுறித்து, குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா தலைவர் எல்.ஏ.டி. பழனிசாமி கூறுகையில், சர்வதேச சந்தையில் ஜவுளி உற்பத்தியில் இந்தியாவுக்கு சீனா கடும் போட்டியாக உள்ளது. சீனாவில் உற்பத்தியாகும் ஜவுளிகள் விலை குறைவாகவும், அதிநவீன இயந்திரங்களில் உற்பத்தியாவதால் இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையான சவாலைச் சந்தித்து வருகின்றனர்.
 அதிகளவில் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் இத்தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
 அத்தியாவசியத் தேவை: குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப பூங்காவில் ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், தேவையான மின்சாரத்தை சலுகை விலையில் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் சராசரியாக ரூ. 1.50 கோடி மின்கட்டணம் செலுத்தி வரும் நிலையில் தடையற்ற மின் இணைப்பை வழங்கிட வேண்டும்.
 இப் பூங்காவில் வண்ண நூல்களைக் கொண்டு ஜவுளி உற்பத்தியை ஊக்குவிக்க, சாயப்பூங்கா தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதியும், வழிகாட்டுதலையும் வழங்க வேண்டும். இதுபோன்ற ஊக்குவிப்புகளால் ஜவுளித் தொழில் வளர்ச்சியடைவதோடு, சர்வதேச சந்தையில் இந்தியாவின் நிலை மேலும் உயரும் என்றார்.
 ஆ.ராஜூ சாஸ்திரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com