உப்பு உற்பத்தியில் ஜொலிக்கும் தூத்துக்குடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது
உப்பு உற்பத்தியில் ஜொலிக்கும் தூத்துக்குடி!

தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகம் மட்டுமன்றி நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதால், தூத்துக்குடி மாவட்டத்தில் உப்புத் தொழில் மிகவும் ஜொலிப்புடன் நடைபெற்று வருகிறது.
 மாவட்டத்தில், தூத்துக்குடி முள்ளக்காடு, முத்தையாபுரம், ஆறுமுகனேரி, வேம்பார் என கடற்கரைப் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்தத் தொழிலை நம்பி சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.
 நாடு முழுவதும் 52 மாவட்டங்களில் 6 லட்சத்து 15,665 ஏக்கர் நிலங்களில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இதில் தனியார் மூலம் 93 சதவீதம் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்திய அளவில் உப்பு உற்பத்தியில் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் ஆண்டுக்கு சுமார் 25 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
 இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சராசரியாக ஆண்டுக்கு 20 லட்சம் டன் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பு கம்போடியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு. உப்பு உற்பத்தியை நம்பி ஏறத்தாழ 1500 சிறிய நிறுவனங்கள் உள்ளன.
 இருப்பினும், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே உப்பு ஏற்றுமதி குறைந்து வருகிறது. 2013-14ஆம் ஆண்டில் 135.50 ஆயிரம் டன்னும், 2014-15ஆம் ஆண்டில் 71 ஆயிரம் டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால், 2015-16 ஆம் ஆண்டில் 36.92 ஆயிரம் டன்னாகவும், 2016-17ஆம் ஆண்டு 35 ஆயிரம் டன்னாகவும், 2017-18ஆம் ஆண்டு 40 ஆயிரம் டன்னாகவும் ஏற்றுமதி குறைந்துள்ளது.
 ஆண்டுக்கு 6 மாதம் உறுதியாகவும், சில ஆண்டுகளில் 9 மாதம் வரையிலும் உப்பு உற்பத்தி நடைபெற்றாலும், மழைக் காலங்களில் உப்பு உற்பத்தியில் தொய்வு ஏற்படுவது உண்டு. கோடை மழை பெய்துவிட்டால் நல்ல உற்பத்தி நடைபெறும் மாதங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில சமயங்களில் பாதிப்பு ஏற்படுவது உண்டு.
 உற்பத்திக்கு ஏற்ப அடிக்கடி விலையில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவது உண்டு. அந்தப் பாதிப்பு தொழிலாளர்களையும் பாதிக்கும் சூழல் உருவாகும். ஒரு டன் உப்பு ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விற்பனை செய்யப்பட்டால் தங்களுக்கு லாபம் கிடைக்கும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் கருத்து. ஆனால், சில சமயங்களில் ஒரு டன் உப்பு ரூ. 400 முதல் ரூ. 500 வரை மட்டுமே விலை போவதால் பெரிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்கின்றனர் உப்பு உற்பத்தியாளர்கள்.
 உப்பு உற்பத்தியில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களப்பணியில் ஈடுபடுவது உண்டு. சிலர் குடும்பத்தோடு இப்பணியில் ஈடுபடுவதால் தங்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும் என்கின்றனர்.
 அடிக்கடி மருத்துவ முகாம் நடத்த வேண்டும்; தோல் நோய்களுக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும்; மழைக்கால நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக உள்ளன.
 -தி. இன்பராஜ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com