குறைந்த முதலீடு; அதிக வருவாய் - பட்டு வளர்ப்புத் தொழில்

இந்தியாவிலேயே இடைத்தரகர்கள் இல்லாத தொழில் உண்டு என்றால் அவற்றில் முதலிடம் பெறுவது பட்டுநூல் உற்பத்தி தொழிலாகத்தான் இருக்க முடியும்.
குறைந்த முதலீடு; அதிக வருவாய் - பட்டு வளர்ப்புத் தொழில்

இந்தியாவிலேயே இடைத்தரகர்கள் இல்லாத தொழில் உண்டு என்றால் அவற்றில் முதலிடம் பெறுவது பட்டுநூல் உற்பத்தி தொழிலாகத்தான் இருக்க முடியும். இத்தொழிலில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு எந்தவிதமான இடைத்தரகர்களும் இன்றி அரசு நிர்ணயிக்க கூடிய விலையை அப்படியே பெற்றுக்கொள்ளலாம்,
 பாரம்பரிய தொழில்களுள் பட்டுத்தொழிலும் ஒன்றாகும். பட்டுத் தொழில் பண்ணைசார்ந்த தொழிலாகும். கிராமப்புறங்களில் அதிக வேலைவாய்ப்பை கொடுக்கும் தொழிலாகவும், வியாபாரநோக்கில் அதிக வருவாயை விவசாயிகளுக்கு ஈட்டித்தரும் தொழிலாகவும் உள்ளது.
 வேலை இல்லா இளைஞர்கள், பட்டதாரிகள், நடுத்தர சமுதாயத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் வாழ்க்கைதரம் மேம்பட பட்டுவளர்ப்புத் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
 பட்டுத்தொழில் பணிகளில் தற்போது 60 சதவீதம் வரை பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகில் இந்தியாவில் மட்டுமே மல்பெரி பட்டு, டசார்பட்டு, மூகாபட்டு மற்றும் ஈரிபட்டு எனப்படும் நான்கு வகையான பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் பட்டு உற்பத்தியில் கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகம் முதலிடம் வகித்து வருகிறது.
 வெண்பட்டு அதிகளவில் உற்பத்தி செய்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் முக்கிய குறிக்கோளாக உள்ளது.
 குறைந்த முதலீடு: விவசாயிகள் ஒரு ஏக்கர் மல்பெரி நடவு செய்து, பட்டு குடில் அமைத்து, பட்டு வளர்ப்பு மேற்கொண்டு பட்டுகூடு அறுவடையின் மூலம் ஆண்டுக்கு குறைந்தது சுமார் ரூ. 3 லட்சம் வரை வருமானம் பெறலாம். நவீன தொழில்நுட்ப உதவிகளோடு பட்டுப்புழு வளர்ப்பில் ஏக்கருக்கு மாதந்தோறும் ரூ. 40 ஆயிரம் வரை மாத வருமானம் சம்பாதிக்கும் விவசாயிகளும் உள்ளனர்.
 பட்டுத் தொழிலானது மல்பெரி சாகுபடி, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பட்டுநூற்பு ஆகிய மூன்று பிரிவுகளை உள்ளடக்கியது. சமீப காலத்தில் பட்டுத்தொழிலில் அதிக இலை மகசூல் தரும் வீரிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மல்பெரி சாகுபடியில் நவீன கட்டுக்கோப்பு சாகுபடி முறைகள் மற்றும் இயந்திரங்களின் பயன்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதிக பலனளிக்கக்கூடிய கிருமி நீக்க முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பட்டுத் தொழிலில் தரம் வாய்ந்த பட்டுக்கூடுகளின் உற்பத்தி அதிகரித்து, பட்டு விவசாயிகள் அதிக வருவாய் பெற்று வருகின்றனர்.
 நவீன தொழில்நுட்பங்கள்: பட்டு நூற்புத் தொழிலிலும் பலநவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பலமுனை பட்டு நூற்பு இயந்திரங்கள் மற்றும் தானியங்கி பட்டுநூற்பு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகத்தரம் வாய்ந்த பட்டு நூல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 பட்டு விவசாயிகளுக்கும், பட்டு நூற்பு தொழில் முனைவோர்களுக்கும் தேவையான திட்ட உதவிகளுடன், பட்டுத்தொழிலை சிறந்த முறையில் மேற்கொள்ள தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 அரசு வழங்கும் மானியங்கள்: பட்டுத்தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியத் திட்டங்களை வழங்கி வருகின்றன.
 உயர்ரக மல்பெரி நடவு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மல்பெரி பயிடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,500 மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு ரூ.52,500 மானியமாக அரசு வழங்குகிறது.
 மேலும் ரூ.52, 500 மதிப்பிலான நவீன புழுவளர்ப்புத் தளவாடங்களும் வழங்கப்படுகின்றன. புதிதாக பட்டுத் தொழிலில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ரூ. 7ஆயிரம் ஊக்கத்தொகையுடன் 5 நாள்கள் ஓசூரில் உள்ள தமிழ்நாடு பட்டுப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க, தனிபட்டுப்புழு வளர்ப்பு குடில் அமைக்க என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றன.
 பட்டுத் தொழிலில் ஈடுபடும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நலத் திட்ட மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
 திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டுத் தொழில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவதற்கும், அரசின் நலத்திட்ட உதவிகளை எடுத்துரைப்பதற்கும், மாவட்ட உதவி இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் நான்கு பகுதியில் தொழில்நுட்ப சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. அதன்படி அடைக்கலப்பட்டணம், சேரன்மகாதேவி, கடையநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் உதவி ஆய்வாளர்களின் தலைமையில் இளநிலை ஆய்வாளர்களின் கீழ் இந்த சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
 அரசு பட்டுப் பண்ணைகள்: புதிதாக நடவுமேற்கொள்ளும் பட்டு விவசாயிகளுக்கு தேவையான மல்பெரி விதை குச்சிகள் செங்கோட்டையில் அரசு பட்டுப் பண்ணையில் கிடைக்கும். விதைகுச்சிகள் வழங்குவதுடன் விவசாயிகளுக்கு போதிய பயிற்சியளிப்பதற்கு வி.எம்.சத்திரத்தில் செயல்விளக்க பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
 அரசு கலப்பின வித்தகம்: விவசாயிகள் தரமான பட்டுக் கூடுகளை உற்பத்தி செய்வதற்கும், தேவையான பட்டுமுட்டை தொகுதிகளை பட்டு விவசாயிகள் மற்றும் இளம்புழு வளர்ப்பாளர்களுக்கு விநியோகம் செய்திடும் வகையிலும் குற்றாலத்தில் அரசு கலப்பின வித்தகம் செயல்பட்டு வருகிறது.
 பட்டுக்கூடு அங்காடி: பட்டு விவசாயிகள் அறுவடை மேற்கொள்ளும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்ய, தென்காசி அருகே நன்னகரத்தில் பட்டுக்கூடு அங்காடி மற்றும் பட்டுநூற்பு மையம் செயல்பட்டு வருகிறது. இடைத் தரகர்கள் இல்லாமல் பட்டுக்கூடுகளின் விலையை அரசே நிர்ணயம் செய்து பட்டு விவசாயிகள் லாபம் ஈட்ட வழிவகை செய்கிறது.
 இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள தென்காசி நன்னகரத்தில் இயங்கிவரும் பட்டுவளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
 - பா.பிரகாஷ்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com