தொழில் முனைவோரை உருவாக்கும் தொழில் முதலீட்டுக் கழகம்

பட்டதாரிகள், தொழிற்கல்வி முடித்தோர் படித்து விட்டு வெளியே வந்த பின், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என
தொழில் முனைவோரை உருவாக்கும் தொழில் முதலீட்டுக் கழகம்

பட்டதாரிகள், தொழிற்கல்வி முடித்தோர் படித்து விட்டு வெளியே வந்த பின், சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என கருதினால், எந்த தொழில் தொடங்குவது, எப்படி தொடங்குவது, அதற்கு தேவையான முதலீடுகள் என்ன, முறையான பயிற்சிகள் எங்கு அளிக்கப்படுகின்றன, மூலப்பொருள்கள் எங்கிருந்து கிடைக்கும், சந்தை வாய்ப்பு எப்படி என்பதை நன்கு அறிந்து கொண்டு புதிய தொழில் முனைவோராக உருவானால் தொழிலில் உயர்ந்த வெற்றியை பெற முடியும் 
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் 1949ஆம் ஆண்டு தொழில் மேம்பாட்டுக்காக நிறுவப்பட்ட முதன்மையான மாநில அரசின் நிதிக்கழகமாகும். தொழில் தொடங்குவதற்குத் தேவையான நிலையான சொத்துகளைப் பெறுவதற்கு தேவையான நிதியுதவியை இக்கழகம் அளிக்கிறது. புதிய தொழில் நிறுவனங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் நிதியுதவி அளிக்கிறது.
கடனுதவி பெறத் தகுதியான தொழில்கள்: இக்கழகத்தில் நிதியுதவி பெற பொருள்கள் உற்பத்தி செய்தல், பக்குவப்படுத்துதல், சுரங்கத் தொழில், மின்சாரம் அல்லது வேறு திறன் உற்பத்தி செய்தல், மருத்துவ இல்லம் அமைத்தல், பராமரிப்புத் தொழில், பழுது பார்த்தல், சோதனை செய்தல் , மரக்கலங்கள், மோட்டார் படகுகள், டிராக்டர்கள் பழுது பார்த்தல், தங்கும் விடுதிகள், வாகனங்கள் வாங்குதல், மீனவர்களுக்குத் தேவையான மீன்பிடிப்பு சாதனங்கள் தயாரித்தல் போன்ற தகுதியான தொழிலில் ஈடுபட வேண்டும்.
வழங்கப்படும் கடன் அளவு: இந்த நிதிக்கழகம் தனியார் மற்றும் பொது நிறுவனங்களுக்கும், கூட்டுறவு இணையத்திற்கும் ரூ.90 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. ஒருவரால் நடத்தப்படும் தொழிலுக்கும், கூட்டு முறையில் நடத்தப்படும் தொழிலுக்கும் ரூ. 60 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. பிற சேவை நோக்கமுடைய நிறுவனங்களுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
நிதியுதவி பெறத் தகுதிகள்: தொழிலின் திட்ட மதிப்பு ரூ. 5 கோடிக்கு மிகாமல் இருந்தால் அந்நிறுவனங்களுக்கு 
இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது. இந்த நிதிக்கழகம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏற்கெனவே இயங்கி வரும் அல்லது இனிமேல் தொடங்கவுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் நிதியுதவி அளிக்கும்.
விண்ணப்பப் படிவங்கள் பெறுதல்: இக்கழகத்திடம் நிதியுதவி பெற குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்கள் இக்கழகத்தின் தலைமை அலுவலகம், வட்டார அலுவலகம் மற்றும் கிளை அலுவலகங்களில் கிடைக்கும்.
குடிசைத் தொழில்களுக்கான கடன் திட்டம்: இக்கழகம் கைவினைஞர்கள், கிராமக் குடிசைத் தொழில்கள் போன்றவற்றுக்கு மூலதனமும், உபகரண நிதியுதவியும் அளிக்கிறது.மேலும் தொழில் தொடங்குபவர்களுக்குத் தேவைப்படும் தொழில்கூடங்கள் அமைக்கவும் நிதியுதவி அளிக்கிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், உடல் ஊனமுற்றோருக்கு மிகக் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்குகிறது.
மூலதனம் இன்றி சுலபக்கடன் திட்டம்: புதிதாக தொழில் தொடங்கத் தேவையான மூலதனம் இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுக்கு வட்டி கிடையாது. எனினும் பணிக்கட்டணமாக குறிப்பிட்ட சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
புதுமைப்படுத்தும் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் உதவி பெற விரும்பும் தொழில் நிறுவனங்கள் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக உற்பத்தி செய்திருக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டிலிருக்கும் இயந்திரங்களையும், உற்பத்தி முறைகளையும், தொழில் நுணுக்கங்களையும் மாற்றி நவீன தொழில் நுணுக்கங்களை ஏற்றுக் கொள்வதற்கும் இக்கழகம் நிதியுதவி அளிக்கிறது.
மருத்துவமனைகள் கட்டுவதற்கு... இத்திட்டத்தின் கீழ் மருத்துவம் படித்த நபர்களுக்கு மருத்துவ மனைகள் அமைப்பதற்கும், நவீன கருவிகள் வாங்குவதற்கும் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
வாகனக் கடன்: சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வாங்குவதற்கு கடனுதவி அளிக்கப்படுகிறது. மேலும் மின் உற்பத்தி இயந்திரம் வாங்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது.
மறுநிதியுதவித் திட்டம்: சிறந்த முறையில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள், இயந்திர உபகரணங்கள் வாங்க நிதி தேவைப்பட்டால் இக்கழகம் கடனுதவி செய்கிறது. இதற்கு தகுதி தொழில் நிறுவனம் 4 ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். 2 ஆண்டுகளாவது லாபம் ஈட்டியிருக்க வேண்டும். வங்கிகளுக்குத் தவணை செலுத்தத் தவறியிருக்கக் கூடாது. வட்டி விகிதம் அரசு விதிகளின்படி அவ்வப்போது மாற்றத்துக்குரியது.
கடன் அனுமதிக்கப்பட்டவுடன், விதிமுறைகளுடன் கூடிய அனுமதிக் கடிதம் தொழில் முனைவோருக்கு அனுப்பப்படுகிறது. தொழில் முனைவோர் குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும் கழகம் கோரும் அனைத்துச் சான்றிதழ்களையும் கழகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
புதிய நிறுவனங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 9 ஆண்டுகள் வரை தவணைக் காலம் அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு... தி தமிழ்நாடு இண்டஸ்ட்டிரியல் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் லிமிùட், 692 அண்ணாசாலை, நந்தணம், சென்னை, 600035. தொலைபேசி எண்கள் 044-24306100 / 044-24331203, ஈமெயில் முகவரி ho@tiic.org.  
-சொக்கம்பட்டி வி.குமாரமுருகன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com