நீரா பானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்: தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் கோரிக்கை

தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் "நீரா' பானத்தை பதப்படுத்தி 6 மாதங்கள் வரை இருப்பு வைப்பதற்கான தொழில்நுட்பத்தையும், இதிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பதற்கான
நீரா பானத்தை பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள்: தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் கோரிக்கை

தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் "நீரா' பானத்தை பதப்படுத்தி 6 மாதங்கள் வரை இருப்பு வைப்பதற்கான தொழில்நுட்பத்தையும், இதிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள்கள் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தையும் கொண்டுவர தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
 தமிழகத்தில் கோவை, திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி உள்பட 21 மாவட்டங்களில் 4.36 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இதன் மூலம் ஆண்டுக்கு 470 கோடியே 64 லட்சம் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்த பராமரிப்பு, பல ஆண்டுகளுக்கு பலன் போன்ற பல்வேறு நன்மைகளால் அதிக அளவில் விவசாயிகள் சாகுபடிக்கு தேர்வு செய்யப்படும் பயிராகவும் தென்னை உள்ளது. 40 நாள்களுக்கு ஒருமுறை தேங்காய்கள் அறுவடை செய்யப்படுகிறது. இருந்தாலும் வறட்சி, தென்னையில் நோய் தாக்குதல் உள்பட பல்வேறு காரணங்களால் ஆண்டுதோறும் தேங்காய் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.
 இதனால், தென்னை உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுதோறும் கணிசமான இழப்பும் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளத்தைப்போல தென்னை மரங்களில் இருந்து "நீரா" பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதியளிக்கக்கோரி தென்னை விவசாயிகள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் தென்னை மரத்தில் இருந்து "நீரா' பானம் இறக்கி, விற்பனை செய்வதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதில், மத்திய அரசின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள, தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் இறக்கிக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.
 அதன் அடிப்படையில் தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் 3 நிறுவனங்கள், திருப்பூர் மாவட்டத்தில் 2 நிறுவனங்கள், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 1 நிறுவனத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் "நீரா' பானம் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஓராண்டுக்கும் மேலாக "நீரா' பானம் உற்பத்தியில் ஈடுபட்டு வந்தாலும் எதிர்பார்த்த அளவு வருவாய் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். தவிர, தினமும் மரங்களில் இருந்து இறக்கப்படும் "நீரா' பானத்தை அன்றே விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு மேல் பதப்படுத்தி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அதிக அளவில் மரங்களில் இறக்க முடியாத நிலை காணப்படுகிறது. தவிர, மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி மேற்கொள்ளும்போது தான் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதனால், "நீரா' பானத்தை 6 மாதங்கள் வரை பதப்படுத்தி வைக்கும் தொழில்நுட்பத்தையும், மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பத்தையும் அரசு கொண்டுவர வலியுறுத்தி தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர் நிறுவனத் தலைவர் ஜெயமணி கூறியதாவது:
 தமிழகத்தில் தற்போது 10 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்கள் "நீரா' பானம் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. குறைந்தது ஒரு நிறுவனம் 100 மரங்களில் இருந்து "நீரா' பானத்தை இறக்கி வருகின்றன. ஐஸ் பாக்ஸ் முறையில் நீரா பானம் இறக்கப்படுகிறது. மரங்களில் பாளையை சீவி விட்டு அதிலிருந்து வடித்தெடுக்கப்படுகிறது. எந்தவித சேர்மங்களும் இதில் சேர்ப்பதில்லை. பாளையில் வடித்தெடுக்கப்படும் பானத்தை ஐஸ் பாக்ஸில் சேமித்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
 நேரடியாக வடித்தெடுக்கப்படும் "நீரா' பானத்தை ஒரு நாளைக்கு மேல் இருப்பு வைக்க முடியாது. ஐஸ் பெட்டியில் வைத்தால் 3 நாள்கள் வரை பாதுகாக்கலாம். பின், அதில் பாக்டீரியக்கள் உருவாகி புளித்துவிடும். பதப்படுத்தும் தொழில்நுட்பம் இல்லாததால் தற்போது குறைந்த எண்ணிக்கையிலான மரங்களில் மட்டுமே "நீரா' பானம் இறக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கும் பெரிய அளவில் வருவாய் கிடைப்பதில்லை. ஏனெனில், மரங்களில் ஏறி "நீரா' பானத்தை இறக்குவதற்கு ஆள்கள் கூலி, விற்பனைக்கு எடுத்துச் செல்லுதல் என செலவு பிடிக்கிறது. தினமும் மரங்களில் காலை, மாலை என இருமுறை பாளையை சீவி விட வேண்டும்.
 ஒரு மரத்தில் இருந்து நாளொன்றுக்கு மரத்தின் ரகங்கள், மண் வகை, தண்ணீரின் தன்மையைப் பொறுத்து 1.5 முதல் 3 லிட்டர் வரை இறக்கப்படுகிறது. செலவுக்கேற்ற வருமானம் இல்லாததால் "நீரா' பானம் இறக்குவதற்கு அனுமதியளித்தும் பயனில்லாத நிலையே காணப்படுகிறது. இந்நிலையில் 'நீரா' பானத்தை 6 மாதங்கள் வரையிலும் பதப்படுத்தி வைத்து விற்பனை செய்வதற்கான தொழில்நுட்ப வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பதப்படுத்தும் தொழில்நுட்பம் வந்தால் அதிகளவிலான மரங்களில் "நீரா' பானம் இறக்குவதற்கும், பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குமான வாய்ப்புகள் கிடைக்கும்.
 தற்போது தமிழக அரசு சார்பில் "நீரா' பானத்தை பாட்டிலில் அடைப்பதற்கான நிறுவனம் அமைப்பதற்கு பொள்ளாச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது, பயன்பாட்டுக்கு வரும் போது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். தவிர, "நீரா" பானத்தில் இருந்து தென்னம் சர்க்கரை, வெல்லம், தேன், மிட்டாய், இனிப்பு வகைகள் என பல்வேறு மதிப்புக்கூட்டுப் பொருள்கள் உற்பத்தி செய்யலாம். ஆனால், இதற்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய கருவிகள் நிறுவ வேண்டும். "நீரா' பானத்தை மதிப்புக்கூட்டுப் பொருள்களாக விற்பனை செய்யும்போது அதிக வருமானம் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்பங்களோ, வசதிகளோ இல்லை. பதப்படுத்தும் தொழிற்சாலை, மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்திக்கான கருவிகளுக்கான நித உதவியை அரசு அளிக்க வேண்டும். இதனால், முதல்கட்டமாக தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலை 500 மரங்களில் "நீரா' பானம் இறக்குவதற்கான கட்டமைப்பு வசதிகளை செய்து தரக்கோரி வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை ஆணையரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக செய்துகொடுக்க வேண்டும்,' என்றார்.
 -எம்.முனுசாமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com