பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் ...

கோவையில் முதல் பஞ்சாலை 1888-இல் தொடங்கப்பட்டது. அது, சி.எஸ்.டபிள்யு மில்ஸ் என்று அழைக்கப்பட்ட கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில் ஆகும்.
பஞ்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம் ...

கோவையில் முதல் பஞ்சாலை 1888-இல் தொடங்கப்பட்டது. அது, சி.எஸ்.டபிள்யு மில்ஸ் என்று அழைக்கப்பட்ட கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில் ஆகும். சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பின்னாளில் ஸ்டேன்ஸ் மில் என்று அழைக்கப்பட்டது.
 பஞ்சாலைத் தொழிலுக்கு மட்டுமின்றி கோவையின் தொழில் வளர்ச்சிக்கும் வித்திட்டது ஸ்டேன்ஸ் மில்தான். இதைத் தொடர்ந்து 1930-ஆம் ஆண்டு வரையிலும் கோவையில் அடுத்தடுத்து 8 பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆலைகள் அதிகரித்ததும் தொழிலாளர் சமுதாயம் என்ற ஒரு புதிய பிரிவு கோவையில் தோன்றியது. அந்த காலகட்டத்தில் 10 மணி நேர வேலையால் அவதிப்பட்ட தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், மருத்துவ வசதி, போனஸ் போன்றவற்றுக்காக குரல் எழுப்பத் தொடங்கினர். இதனால் 1936-இல் கோயமுத்தூர் மில் தொழிலாளர் சங்கம் தோன்றியது.
 இதற்கிடையே தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக வேலை நேரம் 9 மணி நேரமாக குறைக்கப்பட்டது. மேலும், என்.ஜி.ராமசாமி தலைமையில் கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் உருவானது. தீபாவளி போனஸுக்காக வேலை நிறுத்தங்களும் நடைபெற்றன.
 1942-இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் தீவிரமாக நடைபெற்றது. சிங்காநல்லூரில் ரயில் கவிழ்ப்பு, சூலூர் விமான தளம் எரிப்பு போன்ற வன்முறைகளுடன் பங்கஜா மில்லில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதில் இருவர் உயிரிழந்தனர்.
 இதைத் தொடர்ந்து 1943-இல் ரங்கவிலாஸ் மில் தொழிலாளி கொலை வழக்கில் 1946-இல் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த வி.சின்னையன், வி.ராமையன், ஆர்.வெங்கடாசலம், ஆர்.ரங்கணன் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் சின்னியம்பாளையம் தியாகிகள் என அழைக்கப்படுகின்றனர்.
 இதேபோல் அதிக வேலைப் பளு, வேலைநீக்கம், அபராதம் போன்றவற்றைக் கண்டித்து 1946-இல் ஸ்டேன்ஸ் மில்லில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது.
 ஆகஸ்ட் மாதம் மூடப்பட்ட மில், வெளியூர் தொழிலாளர்களைக் கொண்டு நவம்பர் 11-ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 அன்றைய நாளில் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய அளவிலான வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து கோவையில் பல நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. தொழிலாளர்கள் நிறைந்திருந்ததால் கோவை, சிங்காநல்லூர் தொகுதிகள் தொழிலாளர் தொகுதிகளாகவும் அந்நாளில் இருந்துள்ளன.
 கோவையில் இன்றும் ஏராளமான தொழிலாளர் அமைப்புகள் உள்ளன. கோவை மாநகரம் இன்று கண்டுள்ள வளர்ச்சியில் பெரும் பங்கு தொழிலாளர் சமுதாயத்துக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com