பாரம்பரியத்தை நினைவூட்டும் திருவிழா கடைகள்!

தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து, கிறிஸ்தவ கோயில்களின் விழாக்களிலும், இஸ்லாமியர்களின் கந்தூரி விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம்.
பாரம்பரியத்தை நினைவூட்டும் திருவிழா கடைகள்!

தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து, கிறிஸ்தவ கோயில்களின் விழாக்களிலும், இஸ்லாமியர்களின் கந்தூரி விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி ஏணி மிட்டாய் என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் பாரம்பரிய பலகாரமாக இன்றளவும் திருவிழா கடைகளில் விற்பனையில் முன்னணியில் உள்ளன.
 திருவிழா கடைகளை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் தங்களது குடும்பத்தினரின் கல்வி, உணவு, ஆரோக்கியத்திற்காக நாடோடியான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து உழைத்து வருகின்றனர்.
 பாபநாசம், சீவலப்பேரி, குற்றாலம் பகுதிகளில் சித்திரைத் திருவிழாவிலும், புளியம்பட்டி, வடக்கன்குளம், உவரி, காமநாயக்கன்பட்டி, பனிமயமாதா தேவாலய திருவிழாக்கள், பொட்டல்புதூர், ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா உள்ளிட்ட தென்மாவட்ட முக்கிய திருவிழா நேரங்களிலும் இனிப்பு கடை அமைக்கின்றனர்.
 திருவிழா கடைகளில் காரச்சேவு, இனிப்புச்சேவு, சீனி மற்றும் கருப்புக்கட்டி மிட்டாய்களே அதிகம் விற்பனையாகும். அரிசி மாவு, உளுந்து மாவு, சீனி அல்லது கருப்புக்கட்டி, ஏலக்காய், சுக்கு உள்ளிட்டவை சேர்த்து ஏணி மிட்டாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை பனையோலை பெட்டிகளில் விற்பனை செய்வது வழக்கம். ஆறிய மிட்டாய்களை விட சுடச்சுட கடைகளில் ஏணி மிட்டாய்களை வாங்கி சுவைக்கவே மக்கள் அதிகம் விரும்புவர். இதர இனிப்பு கடைகளில் இருந்து திருவிழா கடைகளில் கிலோவுக்கு ரூ.50 வரை விலை குறைத்து பொருள்களை விற்பதால் மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.
 அதோடு தங்கள் வீடுகளுக்கும், உறவினர்களுக்கும் கோயில் பலகாரமாக இவற்றை வாங்கிச் சென்று கொடுத்து மகிழ்கின்றனர்.
 இது போன்ற திருவிழா கடைகள் வணிக வளர்ச்சிக்கு மட்டுமன்றி அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பதோடு, பாரம்பரியத்தை நினைவூட்டவும் தொடர்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com