மாவட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகம்!

இந்திய துறைமுகங்களில் தனிச் சிறப்பு கொண்டதாக திகழும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பல்வேறு கூடுதல் சிறப்புகள் உண்டு. ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு
மாவட்ட வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தூத்துக்குடி வஉசி துறைமுகம்!

இந்திய துறைமுகங்களில் தனிச் சிறப்பு கொண்டதாக திகழும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பல்வேறு கூடுதல் சிறப்புகள் உண்டு. ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராக 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் தூத்துக்குடி- கொழும்பு இடையே இரண்டு கப்பல்களை சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை முன்னின்று இயக்கியது இன்றுவரை ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது.
 1974ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நாட்டின் 10ஆவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி துறைமுகம், 11.2.2011இல் வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 38 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்து வரும் இத்துறைமுகத்தின் மூலம், நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக பல லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த துறைமுகத்தை நம்பி மாவட்டத்தில் பல்வேறு சிறுதொழில்களும், 1500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.
 வரலாற்றுடன் தொடர்புடைய துறைமுகங்களில் பிரதானமாக விளங்கும் இந்த துறைமுகத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. 24 மணி நேர செயல்பாடு, இரவு நேரத்திலும் கப்பல் இயக்கம், 12.80 மீட்டர் கப்பல் நிறுத்த தளம், முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் அகல ரயில் பாதை வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் தூத்துக்குடி துறைமுகம் அனைவரும் விரும்பும் துறைமுகமாக உள்ளது.
 மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம் கடலுக்குள் 4 கி.மீ. வரை ஊடுருவும் ரப்பிள் மவுன்ட் வகை அலைதாங்கிகளால் உருவாக்கப்பட்ட செயற்கை துறைமுகமாகும். புயல் மற்றும் சூறைக்காற்றை தாங்கும் திறன் கொண்ட பாதுகாப்பான துறைமுகம் ஆகும்.
 கி.பி. 7 முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்களாலும், கி.பி. 10 முதல் 12ஆம் நூற்றாண்டு வரை சோழ அரசர்களாலும் ஆளப்பட்டபோது தூத்துக்குடியில் பல்வேறு கப்பல்கள் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்ததாக தகவல்கள் உள்ளன.
 1532ஆம் ஆண்டு முதல் சில ஆண்டுகள் போர்ச்சுக்கீசியர்களும், 1649 ஆம் ஆண்டு முதல் டச்சுக்காரர்களும் தூத்துக்குடியை ஆட்சி செய்துள்ளனர்.
 17ஆம் நூற்றாண்டில் பல்வேறு ஆங்கிலேய தலைவர்கள் தூத்துக்குடிக்கு வந்த நிலையில், 1825 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி முதல் தூத்துக்குடி, புன்னக்காயல், காயல்பட்டினம், மணப்பாடு ஆகிய துறைமுகங்கள் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன.
 தூத்துக்குடி துறைமுகத்தின் வளர்ச்சியை திட்டமிட்டு டச்சுக்காரர்களால் முயல்தீவு பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னத்தை தகர்த்த ஆங்கிலேயர்கள், அதே இடத்தில் 1842ஆம் ஆண்டு கலங்கரை விளக்கம் அமைத்தனர். தூத்துக்குடி துறைமுகத்தின் வரலாற்றுத் தொடக்கம் இதுவே ஆகும்.
 1868ஆம் ஆண்டு ரூ.1200 செலவில் 100 அடி நீளத்தில் முதன்முதலாக மரத்தால் செய்யப்பட்ட தங்குதளம், திட்டமிட்ட துறைமுக வளர்ச்சியின் முதல் கல் ஆகும். 1873ஆம் ஆண்டு அந்த தங்குதளம் நீளப்படுத்தப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
 1877ஆம் ஆண்டு பர்மிங்ஹாம் பிரபுவின் வருகையின்போது நகரின் வளர்ச்சிக்காக தங்குதளத்தை அகலப்படுத்த வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தினர். இதன் தொடர்ச்சியாக 1887ஆம் ஆண்டு பாலத்தின் அகலம் இரட்டிப்பாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டது.
 துறைமுக வளர்ச்சியை கருத்தில் கொண்டு ரூ. 2 லட்சம் செலவில் புதிய தங்குதளம் ஏற்படுத்தப்பட்டு, 1895ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 1899ஆம் ஆண்டு கப்பல்தளம் வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது.
 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் விடுதலைப்போரில் தூத்துக்குடி துறைமுகத்தின் பங்கு உலகுக்கு தெரிய வந்தது. அந்நிய பொருள்களை புறக்கணிப்போம் என்ற முழக்கத்துடன் வ.உ. சிதம்பரம் ஆங்கில ஆதிக்கத்தின் அனைத்து சக்திகளையும் முறியடித்து, எஸ்.எஸ். காலியா, லாவோஸ் என்ற இரண்டு கப்பல்களை தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்து "சுதேசி இயக்க கப்பல் கழகம்’ என்ற பெயரில் தூத்துக்குடி- கொழும்பு இடையே கப்பல் இயக்கினார்.
 சுதந்திரத்துக்குப் பிறகு 1949ஆம் ஆண்டு தூத்துக்குடி துறைமுகத்தால் வ.உ. சிதம்பரனார் என்ற பெயரில் இழுவைப்படகு முன்னாள் ஆளுநர் சி. ராஜகோபாலாச்சாரியாரால் வெள்ளோட்டம் விடப்பட்டது.
 தூத்துக்குடி துறைமுகத் திட்டம் உருவாக்க வேண்டும் என பல்வேறுகட்ட முயற்சிக்குப் பிறகு மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் திட்டம் சேர்க்கப்பட்டது.
 1963ஆம் ஆண்டு ஆக.15ஆம் தேதி அப்போதையை தூத்துக்குடி ஆயர் தாமஸ் பெர்னாண்டோ தூத்துக்குடி துறைமுக கட்டுமானப் பணிக்கு பூமிபூஜை செய்தார். தொடர்ந்து, 5.11.1964 அன்று அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியால் கட்டுமானப் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.
 10ஆண்டுகள் பணிகள் நடைபெற்ற நிலையில், 1974ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நாட்டின் 10ஆவது பெரிய துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் அறிவிக்கப்பட்டது.
 பின்னர், தூத்துக்குடி பழைய துறைமுகம், புதிய துறைமுகம் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு, தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் என 1979ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
 தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் பொறுப்புக் கழகத் தலைவராக தற்போது தா.கி. ராமச்சந்திரன் பணியாற்றி வருகிறார்.
 14 மீட்டர் மிதவை ஆழம் கொண்டதாக உள்ள இந்த துறைமுகத்தை 16 மீட்டர் மிதவை ஆழம் கொண்டதாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது. இந்த பணிகள் நிறைவுற்றால் துறைமுகத்தின் வளர்ச்சி அதிகரிக்கும்.
 இத்துறைமுகத்தின் மூலம் தூத்துக்குடி மாநகரம் மட்டுமன்றி மாவட்டம் முழுவதுமே தொழில் துறை வளர்ச்சி பெற்று வருவதை மறுக்க முடியாது.
 -தி. இன்பராஜ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com