லாபம் தரும் இயற்கை விவசாயம்

ரசாயன உணவுப் பொருள்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயமே இயற்கை விவசாயத் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
லாபம் தரும் இயற்கை விவசாயம்

ரசாயன உணவுப் பொருள்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயமே இயற்கை விவசாயத் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
 தற்போது உள்ள சுற்றுச்சூழல், உணவு முறைகளால் மனிதனின் வாழ்நாள் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. இயற்கையாக விளையக்கூடிய பொருள்களை உண்ட காலம் மாறி, மக்கள் தொகை பெருக்கத்தாலும், தேவை அதிகரித்ததாலும் ரசாயனம் உரங்கள் மூலமாக உணவுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.
 உணவுப் பொருள்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் செடிகள் மட்டுமல்லாமல், அவை உணவாக உடலில் சென்று வெளியேறும் வரை அந்த ரசாயனம் உடலில் பல்வேறு பிரச்னைக்கு மூலக்காரணமாக மாறுகிறது.
 உணவுப் பொருள்களின் தேவைக்காக உற்பத்தியை பெருக்கியது மட்டுமல்லாமல், வணிக நோக்கத்துக்காக அதிக வீரியம் உள்ள ரசாயன மருந்துகளை நிலத்தில் அடித்து இன்று மண்ணுக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு, ரசாயனம் மருந்துகளை பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
 ரசாயன உரங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளை உண்பதால் ஏற்படும் பின் விளைவுகளை மக்கள் உணர ஆரம்பிக்க துவங்கி உள்ளதால் இயற்கை விவசாயம் என்ற வார்த்தை மக்கள் மத்தியில் ஒலிக்கத் துவங்கி உள்ளது.
 இணையத்தின் மூலம் மக்கள் இன்று இயற்கை அங்காடிகளைத் தேடிச் செல்கின்றனர். ஆனால் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருள் உடல் நலத்தைக் காக்கும் என்பதை உணர்ந்தபோதிலும், இயற்கை விவசாயம் என்பது இன்று சவாலான முயற்சியாகதான் உள்ளது. ஆனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் இயற்கை விவசாயம், இயற்கை அங்காடிகள், வணிகரீதியாக வெற்றிபெறத் துவங்கி உள்ளது.
 இதுகுறித்து இயற்கை விவசாயி ஒ.ர.ரெய்சன் கூறியதாவது:
 இளங்கலை மற்றும் முதுகலை பட்டய படிப்புகளை முடித்த நான், தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தேன். 1989 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வேலை கிடைத்து சுமார் 9 ஆண்டுகள் கணினி மென்பொறியாளராகப் பணியாற்றினேன். பின்னர் பணியால் ஏற்பட்ட மன உளைச்சலால் இந்தியா வந்து விவசாயம் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். 2006 இல் கோவை வந்து என் வீட்டின் அருகே 8 சென்ட் நிலத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் காய்கறிகள் சாகுபடி செய்தேன். பின்னர் தொண்டாமுத்தூர் அருகே சகோதரனுடன் சேர்ந்து 7 ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடிவெடுத்தேன். மண் தரம், சூழல்களை ஆராய வேளாண் துறை மூலமாக நிலத்தில் ஆய்வு மேற்கொண்டோம். அப்போது அவர்களது அறிவுறுத்தல்படி தனியார் நிறுவனம் மூலமாக மரங்கள் மற்றும் நிலத்துக்கு பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்டன. மருந்தை அடிக்கும்போதே பணிக்கு வந்தவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டதை பார்த்தேன். பிறகு அந்த மருந்துகள் குறித்து சோதனை செய்தபோது, அவை மிகவும் மோசமான ரசாயனம் என்பது தெரியவந்தது.
 மேலும் இந்த வகை பூச்சிக்கொல்லிகளுக்கு பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்தைக் கண்டறிந்தேன். அதன் பிறகு ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன்.
 முதலாக வெள்ளை பூசணி விதைகளை நிலத்தில் பயிரிட்டோம். சுமார் 500 கிலோ பூசணிக் காய்கள் அறுவடை செய்தோம். அதை சந்தையில் விற்றபோது ஒரு கிலோ பூசணி ரூ.1-க்கு மட்டுமே விலை போனது.
 வண்டி வாடகை, பணியாளர்கள் ஊதியம் உள்ளிட்ட செலவுகள் போக ரூ.136 லாபம் கிடைத்தது. அதன் பின் விவசாயத்தை விட்டுவிட வேண்டும் என தோன்றிய நேரத்தில், நண்பர் ஒருவர் மூலம் சாய்பாபா காலனி அருகே இயற்கை அங்காடியை திறக்க முயற்சி மேற்கொண்டேன். 2013 இல் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
 ரசாயன உரங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள் சந்தையில் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் விலையை மக்கள் ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இருந்தது. ஆனால் சமீப காலமாக மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளும், புதிய வகை நோய்களும், உணவு முறைகளை பற்றி சிந்திக்க வைத்துள்ளது. விலையைத் தாண்டி உணவு மீது மக்கள் அக்கறை காட்டத் துவங்கி உள்ளனர்.
 ஆர்வம், உழைப்பு, தேடல் ஆகியவை முழுமையாக இருந்தால் இயற்கை விவசாயமும் லாபம் ஈட்டக்கூடிய தொழில்தான் என்றார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com