வீட்டில் இருந்தே சம்பாதிக்க காளான் வளர்ப்பு

கோவை மாவட்டத்தில் சிப்பிக் காளான் உற்பத்தி, சிறு சிறு பண்ணைகளாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது.
வீட்டில் இருந்தே சம்பாதிக்க காளான் வளர்ப்பு

கோவை மாவட்டத்தில் சிப்பிக் காளான் உற்பத்தி, சிறு சிறு பண்ணைகளாக அதிகரிக்கத் துவங்கி உள்ளது. மழைக்காலங்களில் தோட்டங்களில் இயற்கையாக உற்பத்தியாகும் காளான்கள், தற்போது வணிக ரீதியாக விவசாயிகள் உற்பத்தி செய்ய துவங்கி உள்ளனர்.

தோட்டத்தில் இயற்கையாக முளைக்கும் காளான் துண்டுகளை ஆய்வுக்கூடங்களில் காளான் விதைகளாக மாற்றுகின்றனர். அதை மீண்டும் பண்ணைகளில் வைக்கோல் மூலம் காளான்களாக உற்பத்தி செய்து, அவை சந்தைப்படுத்தப்படுகிறது. விவசாயத்தில் லாபம் தரக்கூடிய முக்கிய காரணிகளாக காளான் உற்பத்தி மாறி வருகிறது. இதற்காக தமிழ்நாடு வேளாண் துறை சார்பாக விவசாயிகள் மத்தியில் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், காளான் உற்பத்தி குறித்து சிறப்பு வகுப்புகள் எடுத்து, செயல்முறை விளக்கமும் அளித்து சான்றிதழ்கள் வழங்குகின்றனர்.
 ஆரம்பத்தில் பெரிய அளவில் காளான் பண்ணைகள் அமைத்து, பல தொழிலாளர்களைக் கொண்டு காளான் உற்பத்தியை விவசாயிகள் செய்யத் துவங்கினர். அதன் பிறகு உற்பத்தியான காளான்களை சந்தைப் படுத்துவது மிக பெரிய சவாலாக மாறியது. எந்த அளவுக்கு லாபம் தருகிறதோ, அதே அளவுக்கு பின்னடைவையும் சந்திக்கும் நிலை ஏற்பட்டது. அதிக அளவு காளான் அறுவடை செய்யும்போது அவற்றை சந்தைகளுக்கு சரியான நேரத்தில் கொண்டு சேர்த்து லாபம் பார்க்க வேண்டும் என்ற சூழலால் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட பண்ணைகள் மூட கூடிய நிலை ஏற்பட்டது.
 ஆனால் தற்போது வீடுகளில் குறைவான முதலீட்டில் காளான் வளர்ப்புகளை பலர் சாத்தியம் ஆக்கி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் சிறிய அளவில் காளான் பண்ணைகளை வீட்டில் அமைத்து, தங்கள் பகுதிகளில் மட்டுமே சந்தைப்படுத்தி வருகின்றனர்.
 கோவை, சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகள் இலக்கியா கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பம் முதலாமாண்டு படித்து வருகிறார். விவசாயத்தின் மீது உள்ள ஆர்வம் காரணமாக கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் காளான் பயிற்சி வகுப்பு சென்று காளான் வளர்ப்பு குறித்து பயிற்று சான்றிதழ் பெற்றுள்ளார். தினமும் கல்லூரிக்கு சென்று மாலையில் காளான் பண்ணைகளைப் பராமரித்து வரும் இலக்கியா. காளான் வளர்ப்பு குறித்து பல்வேறு ஆய்வுகளையும் செய்து வருகிறார்.
 இது குறித்து அவர் கூறியதாவது: சிறு வயதிலிருந்து இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் எந்த மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும் என முடிவு செய்ய முடியாமல் இருந்தேன். பொதுவாக விவசாயம் செய்ய வேண்டும் என்றால், குறிப்பிட்ட அளவு நிலம் வேண்டும், அதில் தண்ணீர் வசதி, அதிக அளவு முதலீடு ஆகியவை தேவைப்படுவதால் மாடித் தோட்டம் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. ஆனால் அதில் வணிக ரீதியாக எப்படி லாபம் பார்க்க முடியும் என்ற யோசனை ஏற்பட்டது. பள்ளியில் படித்தபோது காளான் வளர்ப்புகள் பற்றி படித்த ஞாபகம் வந்தது. அதன் பின்னர் காளான் வளர்ப்புகள் குறித்து தேடிப் படிக்க ஆரம்பித்தேன். கோவை கொடிசியா வளாகத்தில் வேளாண் துறை சார்பாக வேளாண் கண்காட்சி நடைபெற்றது. அப்போது அங்கு காளான் வளர்ப்பு குறித்த புத்தகங்களை வாங்கி, அதில் இருந்த கட்டுரைகள் மூலம் காளான் வளர்ப்பும், லாபம் குறித்து தெரிந்தது. அதன் பின் வேளாண் பல்கலைக்கழகம் சென்று அங்கு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு, காளான் வளர்ப்பு குறித்து கற்றுகொண்டேன். பிறகு விடுமுறை நாள்களில் வீட்டிலேயே குறைவான முதலீட்டை பெற்று காளான் உற்பத்தியை செய்யத் துவங்கினேன். ஆரம்பத்தில் நஷ்டத்தை சந்தித்தேன். பிறகு காளான் வளர்ப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு சிறு சிறு தவறுகளை சரி செய்ய துவங்கினேன் . அதன் பிறகே காளான் உற்பத்தியை முழுமையாக பெற முடிந்தது. முதலில் குறைவான அளவு காளான்களை உற்பத்தி செய்து, அதை வீட்டின் அருகே உள்ள மக்களுக்கு விற்பனை செய்தேன்.
 காளான் வளர்ப்பில் நான் தாயாராகி விட்டேன் என்ற தன்னம்பிக்கை வந்த பின்னர், முதலில் நான் சிந்தித்தது சந்தைப் படுத்துவது எப்படி என்பதுதான். இதற்கான பல்வேறு அங்காடிகளுக்கு நேரடியாக சென்று சிப்பி காளான் பற்றி கூறியபோது அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் காளான்களை உற்பத்தி செய்தேன். கோவை, சாய்பாபா காலனி பகுதியில் உள்ள இயற்கை அங்காடியைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். கோவை மாவட்டத்தை பொருத்தவரை சிப்பிக் காளான் விற்பனை என்பது குறைவுதான். எனவே தொடர்ந்து காளான்களை விநியோகம் செய்தால் பெற்றுக் கொள்வதாக அங்காடி உரிமையாளர் தெரிவித்தார். அதன் பின் தினமும் கல்லூரி முடிந்தவுடன் காளான் உற்பத்தியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தேன். இந்த முயற்சியில் எனது குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு முக்கிய பங்கு வகிக்கிறது.
 ஆரம்பத்தில் லாபம் இல்லாமல் இருந்தாலும், தொடர்ந்து காளான் வளர்ப்பை முறையாகப் பராமரிப்பதன் மூலம் லாபத்தை ஈட்ட முடியும் என்பதை கண்டறிந்தேன். உற்பத்திக்கு ஏற்ப சந்தைப்படுத்த முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம் காளான் தேங்குவதையும், வீணாவதையும் தவிர்க்க முடியும்.
 காளான் விவசாயத்தை பொருத்தவரை ஈரப்பதம்தான் உற்பத்தியை நிர்ணயம் செய்கிறது. பொதுவாக மழைக்காலங்களில் எதிர்பார்த்ததை விட அதிக அளவு உற்பத்தியை அள்ளித்தரும். காளான் பண்ணைகள், கோடைக்காலங்கள் முற்றிலும் காய்ந்து மிக பெரிய ஏமாற்றத்தை தரும். கடந்த ஒரு ஆண்டு கால காளான் உற்பத்தியில் பல ஆய்வுகளை மேற்கொண்டேன். வைக்கோலுக்கு மாற்று மூலக்கூறுகளாக மூங்கில் இலை, தென்னை நார்களை பயன்படுத்துவது உள்ளிட்ட ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறேன். மேலும் மறு சுழற்சி செய்யக்கூடிய நெகிழிகளை பயன்படுத்தினால் அதையும் தவிர்த்து நெகிழியற்ற முறையில் காளான்களை உற்பத்தி செய்யும் முறை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இந்த தலைமுறையின் விவசாயம் என்றால் நிலத்தில் இறங்கி உழுவது மட்டுமே என்ற மாற்று சிந்தனைகளை மாற்றி விவசாயத்தில் உள்ள அனைத்துத் துறைகள் குறித்த புரிதல்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
 இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது :
 காளான் வளர்ப்பு மிகவும் லாபம் தரக்கூடிய தொழில். காளான்களை உற்பத்தி செய்யப் பயிற்சி பெற்று முறையாக பராமரித்தால் நிச்சயமாக லாபம் ஈட்டக்கூடிய விவசாயமாக இருக்கும். அந்தந்தப் பகுதிகளுக்கு ஏற்றவாறு சிப்பிக் காளான், பால் காளான் , மொட்டு காளான் பண்ணைகளை அமைக்க வேண்டும். அதே போல் உற்பத்தி செய்யப்படும் காளான்களை சரியான முறையில் சந்தை படுத்தவும், அதற்கான தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். புதிதாக காளான் பண்ணைகளை அமைப்போர் தாங்கள் உற்பத்தி செய்யும் காளான்களை சந்தைப்படுத்துவது குறித்து வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காளான் துறையை அணுகினால் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் காளான் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம். பெரிய பண்ணைகளாக இல்லாமல் சிறு சிறு பண்ணைகளாக வீட்டிலேயே அமைத்து காளான் வளர்ப்புத் தொழிலை செய்ய இளைஞர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றனர்.
 - க. தென்னிலவன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com