சுடச்சுட

    

    அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

    By புது தில்லி,  |   Published on : 03rd February 2014 03:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திங்கள்கிழமை (பிப்ரவரி 3-ம் தேதி) நடைபெற உள்ள தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    அலைக்கற்றை உரிமத்தின் காலத்தை நீட்டிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்தது.

    பார்தி ஏர்டெல், வோடாஃபோன், லூப் மற்றும் ஐடியா ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

    மனுவில், "திங்கள்கிழமை நடைபெறும் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும். தங்கள் நிறுவனங்களின் தொலைத் தொடர்பு சேவையின் உரிமத்தை மேலும் 10 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மனுவை அவசர விசாரணையாகக் கருதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

    ஏர்டெல் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி மற்றும் வோடாஃபோன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடுகையில், ""புதிய அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்வதற்கு பதிலாக தற்போதுள்ள அலைக்கற்றை உரிமத்தின் காலத்தை நீட்டிக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடு செய்துள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்களின் இந்த எதிர்பார்ப்பு சரியானதுதான். இக்கோரிக்கைக்கு தொலைத் தொடர்பு தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது முறையற்றது'' என்று வாதிட்டனர்.

    ""அலைக்கற்றை ஏலத்துக்கு தடை விதித்தால், அது தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும். எனவே, ஏலத்துக்கு தடை விதிக்கக் கூடாது'' என்று மத்திய அரசின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மனுதாரர்களின் கோரிக்கை மீதான விசாரணை துரிதப்படுத்தப்படும்' என்று உத்தரவிட்டனர்.

    இதைத் தொடர்ந்து, "மனு மீதான விசாரணை முடியும்வரை ஏலத்தின் முடிவுகள் அறிவிக்கப்படக்கூடாது' என்று நீதிமன்றத்தில் ரோத்தகி கேட்டுக்கொண்டனர்.

    திங்கள்கிழமை நடைபெறும் அலைக்கற்றை ஏலத்தில் கலந்து கொள்வதற்கான பட்டியலில் வோடாஃபோன் மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

    இந்நிறுவனங்களின் தற்போதைய அலைக்கற்றை உரிமத்தின் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. ஐடியா நிறுவனத்தின் அலைக்கற்றை உரிமம் 2015-ம் ஆண்டு வரை உள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai