சுடச்சுட

  

  நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பாக தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில், துணைநிலை ஆளுநரை அணுக மேக்ஸ்போர்ட் பள்ளி முடிவு செய்துள்ளது.

  தில்லியின் பீதம்புரா, ரோகிணி பகுதிகளில் உள்ள மேக்ஸ்போர்ட் பள்ளிகள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாகவும், அந்த பள்ளிகளில் இருந்து போலி நிறுவனங்களின் பெயருக்கு ரூ.50 கோடி வரை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாகவும் புகார்கள் எழுந்தன.

  இதுதொடர்பாக விசாரிக்கும்படி, தில்லி வடமேற்கு மாவட்ட ஆட்சியருக்கு துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு, தில்லி காவல் துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவை கல்வித் துறை அணுகியது.

  இதனிடையே, தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய தில்லி அரசு, அப்பள்ளிகளின் செயல்பாட்டை தில்லி அரசின் கட்டுப்பாட்டில் ஏன் கொண்டுவரக் கூடாது? எனவும் கேள்வி எழுப்பியிருந்தது.

  இந்நிலையில், தில்லி அரசின் நோட்டீஸுக்கு எதிராக, துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கை அணுக மேக்ஸ்போர்ட் பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

  இதுகுறித்து, அந்த பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

  தில்லி அரசின் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. எங்களது பள்ளிகளில் கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்தோம்.

  அவர்கள் கேட்ட ஆவணங்கள் அனைத்தையும் வழங்கினோம். எனினும், எங்களது பள்ளிகளுக்கு களங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் தில்லி அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸ், சட்டவிரோதமானதாகும்.

  இந்த விவகாரத்தில், துணைநிலை ஆளுநரை அணுகி எங்களது தரப்பு விளக்கத்தை எடுத்துரைப்போம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai