சுடச்சுட

    

    இந்தியப் புதையல் - ஒரு தேடல் - பால் ப்ரன்டன்; தமிழில்: புவனா பாலு; பக். 520; ரூ.300; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை - 17.

    ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930-களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது ராதா சுவாமி அமைப்பின் சாஹப்ஜி மகராஜ், சென்னையில் பிரம்ம சுகானந்தா போன்ற மேன்மைமிகு ஆசான்களையும், சில கபட வேடதாரிகளையும், மாயவித்தைப் புரிபவர்களையும் சந்தித்ததைச் சுவைபட பதிவு செய்துள்ளார் பால் ப்ரன்டன். காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்த பின், அவரது அறிவுறுத்தலின்பேரில் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்த பின்தான், அவரது தேடல் நிறைவு பெறுகிறது. தனது சந்தேகங்களுக்கு வாய்மொழியாக அதிகம் பதில் கூறாமலேயே தனது அருள் பார்வையாலேயே பூரண நிலையை ரமண மகரிஷி உணர்த்தியதாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரன்டன். படிக்கும்போது இது மொழிபெயர்ப்பு நூல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பால் ப்ரன்டன் யார், அவரது பின்னணி என்ன என்பது பற்றி சிறு குறிப்பும் இல்லாதது ஒரு குறை. தனக்கேற்ற குருவைக் கண்டுபிடிப்பது எவ்வளவு கடினம் என்பதையும், இறுதி வெற்றி அடையும் வரை முயற்சியைக் கைவிடக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள ஆன்மிக ஆர்வலர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல் இது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai