சுடச்சுட

  

  திருப்பரங்குன்றம், ஜூலை 30: தேடல் நிகழ்ச்சி மாணவர்களின் ஆற்றலை வெளிக்கொண்டு வர நல்ல வாய்ப்பாக அமையும் என மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் தெரிவித்தார்.

    தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் தேடல்-11 எனும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. தாளாளர் கருமுத்து தி.கண்ணன் தலைமை வகித்தார். முதல்வர் வி.அபய்குமார் முன்னிலை வகித்தார்.

     இதில் மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் பேசியது:

     இன்றைய மாணவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. எதிர்காலத்தில் தான் என்னவாக வரவேண்டும் என்ற லட்சியம் இருக்கிறது. அதனை அடைய நாம் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    ஆசிரியர்கள் மாணவர்களை மருத்துவர், பொறியாளர் என்பன உள்ளிட்ட அதிகாரிகளாக்குவதோடு, அவர்களை மனிதர்களாக உருவாக்க வேண்டும். நல்ல மனிதன்தான் சரித்திரத்தில் இடம் பெறுவான்.

    நான் நாமக்கல் மாவட்டத்தில் 2009-ம் ஆண்டு பணிபுரிந்தபோது வெள்ளந்தூர்  என்ற கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு 10-ம் வகுப்பு பயின்ற கதிர்வேல் என்ற மாணவன் தேர்வில் 491 மதிப்பெண் பெற்றார். அந்த மாணவரைப்  பாராட்டி அரசு அவரது மேல்நிலைப் படிப்புக்கு தனியார் பள்ளியில் சேர்ந்து படிக்க ரூ.28 ஆயிரம் உதவித் தொகை வழங்கியது. அதனை மறுத்த அந்த ஏழை மாணவர் தன்னை 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க உதவிய தனது ஆசிரியர்களைவிட்டு வேறு பள்ளிக்குச் செல்லமாட்டேன்.

     மீண்டும் தான் இதே பள்ளியில் படித்து 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுப்பேன் எனத் தெரிவித்தார். அதன்படி தற்போது 2011-ம் ஆண்டு நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வில் அதே கதிர்வேல் 1165 மதிப்பெண் பெற்று, மாற்றுத்திறனாளியான அவர் மாநிலத்திலேயே மாற்றுத்திறனாளிகளில் முதலாவதாக வந்து தற்போது  சென்னையில் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

     அவர் தனது ஆசிரியரை நம்பினார். மாணவர்களாகிய நீங்கள் ஆசிரியர்களை நம்புங்கள். ஆசிரியரிடம் ஏன், எப்படி, எதற்கு எனக் கேள்வி கேளுங்கள். தெரியாததைக் அறிந்திடுங்கள். அதுதான் உங்களை வலுப்படுத்தும் என்றார்.

     புதுமைத் தேடல் என்ற தலைப்பை மையமாகக் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள 89 பள்ளிகளிலிருந்து 4200-க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கதை, கவிதை, கட்டுரை, திருக்குறள் ஒப்புவித்தல் என்பன உள்பட 75 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.

    நிகழ்ச்சியில் டீன் வாசுதேவன், மோகன், பேராசிரியர்கள் கார்த்திக், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai