Enable Javscript for better performance
"வாழ்க்கையில் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும்'- Dinamani

சுடச்சுட

  

  "வாழ்க்கையில் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும்'

  By kirthika  |   Published on : 26th May 2016 06:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வாழ்க்கையில் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்று விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநரான வி.ஆர்.முத்து தெரிவித்தார். பாவை பொறியியல் கல்லூரி மேலாண்மைத் துறை சார்பில் "அசிடஸ் 16' என்ற தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கருத்தரங்குக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விருதுநகர் இதயம் நல்லெண்ணெய் குழுமத்தின் தலைமை நிர்வாக அலுவலர் வி.ஆர்.முத்து கலந்து கொண்டார்.

  அவர் மேலும் பேசியது:

  தலைமைப் பண்பு உள்ளவர்களே ஒரு நிறுவனத்தின் மேலாளர்களாக வர முடியும். மேலாண்மைப் படிப்பில் அதிக முக்கியத்துவம் தரப்படுவது தலைமைப் பண்புகளுக்குத் தான். ஆகவே, ஒரு நிறுவனம் திறம்பட செயல்படுகிறது என்றால், நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது என்று அர்த்தம். இந்த இரண்டு வருடங்களில் இதைத்தான் நீங்கள் முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.

  மேலாளர்கள் என அறியப்பட உள்ள நீங்கள் உங்கள் பணியை நீங்கள் சார்ந்த மதம் எனவும், உங்களுடைய நிறுவனமே உங்கள் கோயில் எனவும், உங்களுடைய வாடிக்கையாளர்களே உங்கள் தெய்வம் எனவும், அவர்களுக்கு நீங்கள் செய்யும் சேவையே சிறந்த பூஜை எனவும், அவர்களின் திருப்தியே உங்களுக்கான பிரசாதம் எனவும் கொள்ள வேண்டும். அப்போது பாருங்கள் நீங்கள் மிகச் சிறந்த மேலாளர்களாக உருவாவீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையும். ஒருவர் தொழிலில் முன்னேற வேண்டுமானால் தரமானதைத் தயாரித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.

  மேலாண்மைக் கல்வியில் பல பிரிவுகள் உள்ளன. நீங்கள் எந்தத் துறையைத் தேர்வு செய்தாலும், அதில் உள்ள நுணுக்கங்களை கடைசி வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். கடின உழைப்புக்கு என்றுமே பயன் உண்டு. முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார். உங்கள் பணியில், உங்கள் வாழ்க்கையில் ஒரு தேடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து ஒரு தேடலுடன் நீங்கள் இயங்க வேண்டும். தேடினால் தேடாததெல்லாம் கிடைக்கும். உதாரணமாக, கொலம்பஸ், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் போன்ற அறிஞர்களைக் கூறலாம். கிரஹாம்பெல் காது கேட்கும் கருவியைக் கண்டுபிடிக்க முயலும்போதுதான் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். அதேபோன்று கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க முயலும்போதுதான் அமெரிக்காவைக் கண்டறிந்தார். ஈடுபாட்டுடனும், விடாமுயற்சியுடனும் ஒரு செயலில் ஈடுபட்டால் தோல்வி என்பதே கிடையாது என்றார்.

  துவக்க விழாவில், ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்துப் பேசியது:

  இவ்வுலகில் முயற்சிகள் எப்போதும் மதிக்கப்படுவதில்லை. வெற்றிகள் மிகப் பெரிய அளவில் ஆராதிக்கப்படுகின்றன. தலைவன் என்பவன் ஒரு செயலைச் செய்ய முற்படுகையில் தன் மூளை சார்ந்த அறிவோடும் இதயம் சார்ந்த கனிவோடும் முழுமையாக ஈடுபட்டு செய்ய வேண்டும். ஒரு தாய் தன் குழந்தையிடம் எவ்வாறு அக்கறை செலுத்தி நல்ல முறையில் வழிநடத்திச் செல்கிறாளோ, அதுபோல் ஒரு தலைவன் தன்னை பின்பற்றுபவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டும். தலைவன் என்பவன், தான் மட்டும் முன்னேறிச் சென்றால் போதாது. தனது மக்களும் முன்னேற அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். முன்னதாக, பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசை வழங்கி அறிமுகப்படுத்தினார். இந் நிகழ்ச்சியில் பாவை பொறியியல் கல்லூரி முதல்வர் எம்.பிரேம்குமார், துறைத் தலைவர் பி.ரேகா பிரீத்தி, பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai