சுடச்சுட

  

  49 இணைய தள மையங்களை வாக்காளர் பதிவு மையங்களாக்க நடவடிக்கை

  By kirthika  |   Published on : 26th May 2016 06:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  : விழுப்புரம் மாவட்டத்தில் 49 இணையதள தேடல் மையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வாக்காளர் பதிவு மையங்களாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்தார்.

  விழுப்புரம் மாவட்டத்தில் இணைய தள மையங்களின் பிரதிநிதிகளுக்கு வாக்காளர் பட்டியல் மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சி வகுப்புக்கு மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தலைமை வகித்துப் பேசியது:

  வாக்காளர் பட்டியலில் வாக்காளரது பெயர் இடம்பெற வேண்டுமெனில் வாக்காளர் தங்களுடைய விவரங்களைப் படிவங்களாக நேரடியாகவோ அல்லது வலைதளம் மூலமோ விண்ணப்பிக்கலாம். அது போல் ஒருவர் பெயர் நீக்கம், திருத்தம் அல்லது முகவரி மாற்ற படிவங்களை நிரப்பி வழங்கலாம்.

  விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்வதற்கு படிவத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகங்களில் கொடுக்க வேண்டும்.

  இதில் ஏற்படும் காலதாமதம், சிரமங்கள், பதிவுகளில் ஏற்படும் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யும்போது விண்ணப்பதாரரே சரிபார்ப்பதால் இதில் தவறுகள் ஏற்படாது. தவறான புகைப்படங்கள் இடம்பெறவும் வாய்ப்பில்லை.

   எனவே பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக தனியாரால் நிர்வகிக்கப்படும் இணையதள தேடல் மையங்களை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப வாக்காளர் பதிவு மையங்களாக இயங்குவதற்கு விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 49 இணையதள தேடல் மைய உரிமையாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட உள்ளது. இந்த வசதியை வழங்குவதற்கு விருப்பமுள்ள இணையதள தேடல் மையங்களின் தகுதியான உரிமையாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  இந்த இணையதள தேடல் மையங்களின் வசதியைப் பயன்படுத்தி கொள்வதற்கு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் குறித்து விண்ணப்பித்திட, வாக்காளர் பட்டியல் நீக்கல் குறித்து விண்ணப்பித்திட, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பித்திட ஒரே சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் இருப்பிடம், முகவரி மாற்றம் குறித்து விண்ணப்பித்திட இணையதளம் மூலம் புகார்கள் பதிவு செய்திட என மேற்கண்ட ஒவ்வொரு விண்ணப்பத்திலும் தலா ரூ.10-ம் வாக்காளர் பட்டியல் அச்சிட்டுத் தர (ஒரு பக்கத்துக்கு) வாக்காளர் பட்டியலில் வாக்காளர் பெயர், வாக்குச் சாவடி மையங்களின் பெயர், கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் புகார்களின் நிலை குறித்து அறிய தலா ரூ.3-ம், மேற்கண்ட தேடல்களின் முடிவுகளை அச்சிட்டு அளிக்க தலா ரூ.2-ம் செலுத்த வேண்டும். பொதுமக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இணைதள மையங்களை அணுகிப் பயன்பெறலாம் என்றார்.

  இப் பயிற்சி வகுப்பில் சார் ஆட்சியர் சுபோத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பிருந்தாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரா.பிரியா, கோட்டாட்சியர்கள் அனுசுயாதேவி, ஜெயச்சந்திரன், குணசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai