பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டாளர்கள் சென்ற மே மாதத்தில் ரூ.10,790 கோடியை முதலீடு செய்தனர். இது, இரண்டு ஆண்டுகளில் காணப்படாத அதிகபட்ச அளவாகும்.
இதுகுறித்து இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்ற ஏப்ரலில் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.9,429 கோடி முதலீடு மேற் கொள்ளப்பட்டிருந்த நிலையில், மே மாதத்தில் இது ரூ.10,790 கோடியாக காணப்பட்டது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் அதிகபட்சமாக ரூ.12,273 கோடி முதலீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, சென்ற மே மாதத்தில் தான் முதலீடு இந்த அளவுக்கு அதிகரித்தது.
சென்ற மே மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட நிகர அளவிலான மூதலீடு ரூ.4,721 கோடியாக இருந்தது.
அதையடுத்து, சென்ற ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி ரூ.5.69 லட்சம் கோடியாக இருந்த பரஸ்பர நிதி நிறுவனங்களின் பங்கு சார்ந்த திட்டங்களின் சொத்து மதிப்பு 2.6% அதிகரித்து ரூ.5.83 லட்சம் கோடியானது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.1,370 கோடி வெளியேறியது. அதன் பிறகு தொடர்ந்து 14-ஆவது மாதங்களாக பங்கு சார்ந்த திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு அதிகரித்து வருகிறது.
முதலீட்டாளர் விழிப்புணர்வு பிரசாரங்கள், முதலீட்டு நடவடிக்கைகளில் காகிதம் இல்லாத முழு கணினி பயன்பாடு மற்றும் எஸ்.ஐ.பி. எனப்படும் குறிப்பிட்ட கால இடைவெளி தொடர் சேமிப்பு திட்டங்கள் பலனாக பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு கவனிக்கத்தக்க வளர்ச்சி கண்டு வருவதாக இத்துறையச் சேர்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.