மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவைக் கண்டது.
முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்திருந்ததை சாதகமாகப் பயன்படுத்த நினைத்த முதலீட்டாளர்கள் அவற்றை அதிக அளவில் விற்பனை செய்தனர்.
பிரிட்டனில் நடைபெற்ற வாக்குப்பதிவு மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி கூட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சர்வதேச பங்குச் சந்தைகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
எண்ணெய் எரிவாயுத் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிகபட்சமாக 1.38% சரிவைக் கண்டது. இதனைத் தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.33 சதவீதமும், தொழில்நுட்பத் துறை நிறுவனப் பங்குகளின் விலை 1.19 சதவீதமும் குறைந்தன. இவை தவிர, நுகர்வோர் சாதனங்கள், பொறியியல் சாதனங்கள், ரியல் எஸ்டேட், வேகமாக விற்பனையாகும் நுகர் பொருள்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும் சந்தையில் தேவை குறைந்து காணப்பட்டது.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டி.சி.எஸ். நிறுவனப் பங்கின் விலை 3.59 சதவீதம் வீழ்ச்சி கண்டது. கெயில், ஹீரோ மோட்டோகார்ப், ஏஷியன் பெயின்ட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஓ.என்.ஜி.சி.,
எல் & டி நிறுவனப் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின.
அதேசமயம், மருந்து துறையைச் சேர்ந்த டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, சிப்லா உள்ளிட்ட நிறுவனப் பங்குகளின் விலை 3.79 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 57 புள்ளிகள் சரிவடைந்து 31,213 புள்ளிகளாக நிலைத்தது. தேசிய பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 16 புள்ளிகள் குறைந்து 9,647 புள்ளிகளாக நிலைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.