

அசோக் லேலண்ட் நிறுவனம் கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் (2016-2017) ரூ.476 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் கே. தாசரி சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:- அசோக் லேலண்ட் நிறுவனம் 2015-2016-ஆம் நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.141 கோடி இழப்பை சந்தித்திருந்தது. இதையடுத்து நிர்வாக ரீதியாக மேற்கொண்ட பல்வேறு செயல்பாடுகளால் கடந்த நிதியாண்டின் (2016-2017) 4-ஆவது காலாண்டில் ரூ.476 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. பிஎஸ்3 வகை என்ஜின் பொருத்திய வாகன விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டதால் எங்களது நிறுவனத்துக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் 10,364 வாகனங்கள் இருப்பில் இருந்தன. அதில் 2,000 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. மீதம் உள்ள வாகனங்களில் பிஎஸ் 4 வகை என்ஜின்களைப் பொருத்தி வருகிறோம்.
அசோக் லேலண்ட் தயாரிக்கும் வாகன என்ஜின்களில் ஐஇஜிஆர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளோம். இது பிஎஸ் 4-ஐ விடச் சிறந்தது. இதன் மூலம் 10% வரை கூடுதல் மைலேஜ் கிடைக்கும். தற்போதைய மொத்த உற்பத்தியில் 62% அளவுக்கு லாரிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. வரும் ஆண்டுகளில் இது 50 சதவீதமாகக் குறைக்கப்படும். எஞ்சிய 50 சதவீத அளவுக்கு பேருந்துகள், வாகன உதிரிபாகங்கள், பாதுகாப்புத் துறை வாகனங்கள், மின்னாற்றல் மூலம் செயல்படும் பேருந்துகள் தயாரிக்கப்படும்.
ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் நிறுவனத்தின் ஆலைகளை அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டுக்காக காத்திருக்கிறோம். இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) ஆகியோரிடமிருந்து 19 டெண்டர்களைப் பெற்றுள்ளோம். அதன் மூலம் கண்ணிவெடித் தாக்குதலிலும் பாதிப்படையாத ராணுவ வாகனங்களைத் தயாரிக்கவுள்ளோம். வரும் நிதியாண்டில் பல்வேறு விரிவாக்கப் பணிகளுக்காக ரூ.500 கோடி முதலீடு செய்யவுள்ளோம். ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.