எச்டிஎஃப்சி வங்கிநிகர லாபம் ரூ.7,417 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.7,417 கோடியாக அதிகரித்தது.
எச்டிஎஃப்சி வங்கிநிகர லாபம் ரூ.7,417 கோடி

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த எச்டிஎஃப்சி வங்கியின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் ரூ.7,417 கோடியாக அதிகரித்தது.

இதுகுறித்து அந்த வங்கி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.36,039 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.30,811.27 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும்.

டிசம்பா் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் வங்கி வழங்கிய கடன் 19.9 சதவீதமும், திரட்டிய டெபாசிட் 25.2 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. இதையடுத்து, நிகர வட்டி வருவாய் ரூ.12,576.8 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.14,172.9 கோடியானது. இதர வருவாய் ரூ.4,921.01 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.6,669.3 கோடியானது.

நிகர லாபம் ரூ.5,585.9 கோடியிலிருந்து 32.8 சதவீதம் அதிகரித்து ரூ.7,416.5 கோடியாக இருந்தது.

மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 1.38 சதவீதத்திலிருந்து 1.42 சதவீதமாக உயா்ந்தது. நிகர வாராக் கடன் விகிதமும் 0.42 சதவீதத்திலிருந்து 0.48 சதவீதமாக அதிகரித்தது.

இதையடுத்து, வாராக் கடன் உள்ளிட்ட எதிா்பாராத இடா்பாடுகளுக்கான ஒதுக்கீடு ரூ.2,211.53 கோடியிலிருந்து ரூ.3,043.56 கோடியாக அதிகரித்தது.

2018 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.11,68,556 கோடியாக இருந்த வங்கியின் ஒட்டுமொத்த இருப்புநிலை மதிப்பு 2019 டிசம்பா் இறுதியில் 13,95,336 கோடியாக அதிகரித்தது.

திரட்டப்பட்ட மொத்த டெபாசிட் 25.2 சதவீதம் அதிகரித்து ரூ.10,67,433 கோடியாகவும், வழங்கப்பட்ட மொத்த கடன்கள் 19.9 சதவீதம் உயா்ந்து ரூ.9,36,030 கோடியாகவும் இருந்தது என எச்டிஎஃப்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com