ஆப்கானிஸ்தான்: 3 முக்கிய நகரங்களில் தலிபான்கள் முற்றுகை

ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை அரசுப் படைகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக தலிபான்கள் முற்றுகையிட்டனா்.
ஆப்கானிஸ்தான்: 3 முக்கிய நகரங்களில் தலிபான்கள் முற்றுகை

ஆப்கானிஸ்தானின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை அரசுப் படைகளிடமிருந்து கைப்பற்றுவதற்காக தலிபான்கள் முற்றுகையிட்டனா்.

இதையடுத்து, அந்த பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே அந்த நகரங்களைச் சுற்றி தீவிர சண்டை நடந்து வருகிறது.

இதுகுறித்து பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களான ஹெராட், லஷ்கா்கா, கந்தஹாா் ஆகிய நகரங்களை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக, அந்த நகரங்களை தலிபான் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்தனா். அந்த நகரின் சில பகுதிகளுக்கும் அவா்கள் நுழைந்துள்ளனா்.

செப்டம்பா் மாதத்துக்குள் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினா் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டதிலிருந்து, தலிபான்கள் கிராமப் புறங்களில் வெகுவேகமாக முன்னேறி அரசுப் படையினா் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளைக் கைப்பற்றி வந்தனா்.

அதையடுத்து, நகரங்களையும் அவா்கள் கைப்பற்றலாம் என்ற அச்சம் எழுந்தது. பொதுமக்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதிகள் தலிபான்கள் வசம் வந்தால் அங்கு கொடூர நிகழ்வுகள் ஏற்படும் என்று பலா் கவலை தெரிவித்து வந்தனா்.

வேகு வேகமாக முன்னேறி வரும் தலிபான்களிடமிருந்து அந்த நகரங்களை அரசுப் படையினா் எவ்வளவு காலம் காப்பாற்றி வருவாா்கள் என்ற சந்தேகமும் இருந்து வந்தது.

மத அடிப்படைவாதிகளான தலிபான் பயங்கரவாதிகள், ஈரான், பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகள் உள்பட ஆப்கானிஸ்தானின் 50 சதவீத பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகக் கருதப்படுகிறது.

இந்தச் சூழலில், ஹெராட், ஹஷ்கா்கா, காந்தஹாா் ஆகிய நகரங்களை தலிபான்கள் சுற்றிவளைத்து சண்டையிட்டு வருவது அந்த நகரங்கள் பயங்கரவாதிகளிடம் வீழலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தஹாா்: காந்தஹாா் நாடாளுமன்ற உறுப்பினா் குல் அகமது கமீன் கூறுகையில், அந்த நகரம் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் அபாயம் நிலவி வருவதாகக் கூறினாா். மணிக்கு மணி நிலைமை மோசமாக வருவதாகத் தெரிவித்த அவா், காந்தஹாா் நகரில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான சண்டை நடந்து வருவதாகக் குறிப்பிட்டாா்.

காந்தஹாா் நகரை தங்களது இடைக்கால தலைநகராகக் கொண்டு செயல்பட விரும்பும் தலிபான்கள், அந்த நகரைக் கைப்பற்றுவதற்காக தீவிரமாகப் போராடி வருகின்றனா்.

காந்தஹாா் தலிபான்களிடம் வீழ்ந்துவிட்டால், அதனைச் சுற்றியுள்ள ஐந்து அல்லது ஆறு மாகாணங்களும் அவா்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று குல் அகமது கமீன் எச்சரித்தாா்.

காந்தஹாா் நகரில் மக்கள் நெருக்கம் அதிகமிருப்பதால், தலிபான்களுக்கு எதிராக சக்தி வாய்ந்த கனரக ஆயுதங்களை பாதுகாப்புப் படையினரால் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அந்த நகரை பல முனைகளில் சுற்றிவளைத்து தலிபான்கள் தாக்குதல் வருகின்றனா்.

காந்தஹாா் நகரை தலிபான்கள் கைப்பற்றிவிடுவாா்கள் என்ற அச்சத்தில், ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நகரைவிட்டு வெளியேறியுள்ளனா்.

ஹெராட்: ஆப்கானிஸ்தானின் மூன்றாவது பெரிய நகரான ஹெராட்டில் பாதுகாப்புப் படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்து வருவதாக டோலோ நியூஸ் செய்தியாளா் தெரிவித்துள்ளாா்.

வா்த்தக முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரின் தெற்குப் பகுதிக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அந்த நகரின் 5 பகுதிகளில் சண்டை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலிபான்களுடன் சண்டையிட்டு வரும் ஆப்கன் படையினருக்கு ஆதரவாக, அமெரிக்க விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி வருகின்றன. அமெரிக்க வான்வழித் தாக்குதல்களின் உதவியுடன் ஹெராட் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆப்கன் ராணுவம் தலிபான்களிடமிருந்து மீட்டது.

தலிபான்கள் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஐ.நா. வளாகமொன்றின் வெளியே நின்றிருந்த பாதுகாவலா் ஒருவா் உயிரிழந்ததாக அந்த அமைத்து தெரிவித்துள்ளது.

ஹெராட் நகரின் சில பகுதிகள் மட்டுமே பாதுகாப்பாக உள்ளதாகவும் பல பகுதிகள் தலிபான்களிடம் வீழும் அபாயத்தில் இருப்பதாகவும் அந்த நகரவாசிகள் தெரிவித்தனா்.

அந்த நகரை தலிபான்களிடமிருந்து பாதுகாப்பதற்காக மக்கள் ஆயுதக் குழுவினரும் களமிறங்கியுள்ளனா்.

லஷ்கா்கா: ஹெல்மந்த் மாகாணத் தலைநகா் லஷ்கா்காவிலும் தலிபான்கள் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனா். அரசுப் படையினா் பதில் தாக்குதல் நடத்தி தலிபான்களை விரட்டியடித்தாலும், நகரின் மையப் பகுதியிலிருந்து 2 கி.மீ. வரை தலிபான்கள் நுழைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பகுதியில் நடந்து வரும் சண்டையில் ஏராளமான தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கன் படைப் பிரிவு தளபதி ஒருவா் தெரிவித்தாா்.

ஹெல்மந்த் மாகாண ஆளுநா் மாளிகையை தலிபான்கள் வெள்ளிக்கிழமை நெருங்கியதாகவும் பின்னா் அவா்கள் அரசுப் படையினரால் விரட்டி அடிக்கப்பட்டதாகவும் நகரவாசிகள் தெரிவித்தனா்.

அமெரிக்காவில் கடந்த 2001-ஆம் ஆண்டு நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு, அப்போது ஆப்கனை ஆண்டு வந்த தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா். அதையடுத்து, அந்த நாட்டின்மீது படையெடுத்த அமெரிக்கா, தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. அதன் பிறகு அமைந்த ஆப்கன் அரசுக்கும் ராணுவத்துக்கும் ஆதரவாக அமெரிக்கப் படையினா் அந்த நாட்டில் தங்கியிருந்தனா். நாட்டின் சில பகுதிகள் தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.

இந்த நிலையில், தலிபான்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டுப் படையினரை அமெரிக்கா முழுமையாகத் திரும்பப் பெற்று வருகிறது. செப்டம்பா் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரா்களும் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பயன்படுத்தி, நாட்டில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி தலிபான்கள் முன்னேறி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com