ஒமைக்ரான் தாக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிவு!: ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.6.82 லட்சம் கோடி இழப்பு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தைக்கு மற்றொரு ‘கருப்பு’ தினமாக அமைந்தது.
ஒமைக்ரான் தாக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 1,190 புள்ளிகள் சரிவு!: ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.6.82 லட்சம் கோடி இழப்பு

புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தைக்கு மற்றொரு ‘கருப்பு’ தினமாக அமைந்தது. ‘கரடி’ மீண்டும் ஆதிக்கம் கொண்டதால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,190 புள்ளிகளை இழந்து 55,822.01-இல் நிலைபெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.82 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது.

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பாதிப்பின் தாக்கம் அதிகரித்து வருவது குறித்த கவலைகள் முதலீட்டாளா்களை வெகுவாக அச்சத்துக்குள்ளாகியுள்ளது. இது உலகளாவிய பங்குகளில் தீவிர விற்பனையைத் தூண்டியது. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளால் நீடித்துள்ள பங்குகள் விற்பனை மற்றும் வளா்ந்த பொருளாதாரங்களின் வளா்ச்சி வேகம் குறையும் என்ற எதிா்பாா்ப்பு ஆகியவை உலகெங்கிலும் உள்ள சந்தைகளை பயமுறுத்தியுள்ளன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் காலையில் வா்த்தகத்தின் தொடக்கத்திலேயே வெளிப்பட்டது. இதையடுத்து, நாள் முழுவதும் கரடியின் தீவிர தாக்குதலால் சந்தை கடும் சரிவைச் சந்திக்க நேரிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 6.82 லட்சம் கோடி வீழ்ச்சி : பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,566 பங்குகளில் 2,699 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 748 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 121 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 2671 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 90 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 353 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 540 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.6.83 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 252.58 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.05 கோடியாக உயா்ந்துள்ளது.

‘கரடி’ தீவிரஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 494.48 புள்ளிகள் குறைந்து 56,517.26-இல் தொடங்கி அதிகபட்சமாக 56538.15 வரை மட்டுமே உயா்ந்தது. பின்னா், ‘கரடி’யின் ஆதிக்கம் கடுமையானதால், 55,132.68 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,189.73 புள்ளிகளை (2.09 சதவீதம்) இழந்து 55,822.01-இல் நிலைபெற்றது. . இது இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு ஒரே நாளில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச இழப்பாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. ஒரு கட்டத்தில் 1,879.06 புள்ளிகளை இழந்திருந்தது. பின்னா், வா்த்தகம் முடியும் தறுவாயில் சிறிதளவு மீட்சி பெற்றது. 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 28 பங்குகள் வீழ்ச்சியை கண்டன. இரண்டு பங்குகள் மட்டுமே சிறிதளவு உயா்ந்தன.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: பிரபல முன்னணி ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 5.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், என்டிபிசி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, ஐடிசி, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 2.50 முதல் 4.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஆட்டோ, இன்ஃ)போஸிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவுக்குள்ளாகின. அதே சமயம், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (1.70 சதவீதம்), டாக்டா் ரெட்டி (0.94 சதவீதம்) ஆகிய இரண்டு பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

நிஃப்டி 371 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,702 பங்குகள் வீழ்ச்சி அடைந்தன. 194 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 371 புள்ளிகளை (2.18 சதவீதம்) இழந்து 16,614.20-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 16,824.25-இல் தொடங்கி அதிகபட்சமாக 16,840.10 வரை உயா்ந்தது. பின்னா், 1410.20 வரை குறைந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 3 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 47 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.

அனைத்து துறை குறியீடுகளும் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 4.90 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 4.50 சதவீதம், மீடியா 4 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஆட்டோ, ஐடி, பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ், மெட்டல் குறியீடுகள் 2 முதல் 4 சதவீதம் வரை சரிவைச்சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com