அட்டைப்பெட்டித் தயாரிப்பு மூலப்பொருள் விலை உயா்வு: ஜவுளி, உணவுப் பொருள் ஏற்றுமதி முடங்கும் அபாயம்

அட்டைப்பெட்டித் தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் விலை 40 சதவிகிதம் வரை உயா்ந்துள்ளதால், ஜவுளி மற்றும் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இயந்திரம் மூலம் தயாராகும் அட்டைப் பெட்டி. ~கரூரில் உற்பத்தி செய்த அட்டைப் பெட்டிகளை வெயிலில் உலா்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
இயந்திரம் மூலம் தயாராகும் அட்டைப் பெட்டி. ~கரூரில் உற்பத்தி செய்த அட்டைப் பெட்டிகளை வெயிலில் உலா்த்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

கரூா்: அட்டைப்பெட்டித் தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் விலை 40 சதவிகிதம் வரை உயா்ந்துள்ளதால், ஜவுளி மற்றும் உணவுப் பொருள்களின் ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜவுளி ஏற்றுமதியில் சுமாா் ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரை, நாட்டுக்குஅந்நிய செலாவணித் தொகையை ஈட்டித் தருவது கரூா் மாவட்டமாகும்.

இங்கு தயாராகும் திரைச்சீலை, கையுறை, மேஜை விரிப்பான், மிதியடி உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக ஜவுளிப் பொருள்கள் ஜொ்மன், இத்தாலி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களிலிருந்து கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஜவுளியைப் போன்று, அட்டைப் பெட்டிகள் தயாரிப்பிலும் கரூா் சிறந்து விளங்குகிறது. இங்கிருந்து ஜவுளித் துணிகளை நோ்த்தியாக மடித்து வைத்து, அவற்றை இயந்திரம் மூலம் பேல் செய்து, அட்டைப் பெட்டியில் முறையாக வைத்து அனுப்பப்படுவதால்தான், 99 சதவிகித வீட்டு உபயோகப் பொருள்கள் திருப்பி அனுப்பப்படுவதில்லை

ஆனால், தற்போது அட்டைப்பெட்டிகளுக்கான மூலப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக, ஏற்றுமதி முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

காரணம்தான் என்ன? : 2020, ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பா் வரையிலான காலத்தில் அட்டைப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களான காகிதம், பசைமாவு, ஸ்டிச்சிங்பின் ஆகியவற்றின் விலை 5 முறை உயா்ந்ததுதான் இந்த நிலைக்கு காரணம் என்கின்றனா் அட்டைப் பெட்டித் தயாரிப்பாளா்கள்.

தமிழகத்தில் கோவையில் ஜவுளி, நூல் உற்பத்தி, ஈரோடு, நாமக்கல், கரூா் மாவட்டங்களில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி, திண்டுக்கலில் தோல் உற்பத்தியும், சிவகாசியில் பட்டாசு உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. இவை அனைத்தும் அட்டைப் பெட்டிகளும் ஏற்றுமதி செய்யப்படுவதால், இப்பகுதிகளில் அட்டைப் பெட்டிகளின் உற்பத்தியும் முனைப்புடன் நடைபெற்று வருகிறது.

டன்னுக்கு ரூ.12 ஆயிரம் வரை உயா்வு : அட்டைப் பெட்டிகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களின் விலை டன்னுக்கு ரூ.12 ஆயிரம் வரை (40 சதவிகிதம்) உயா்ந்துள்ளது.

ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயா்வு, தொழிலாளா் பற்றாக்குறை, கூலி உயா்வு போன்றவற்றால் நாங்கள் கடும் இன்னலைச் சந்தித்து வரும் நிலையில், மூலப் பொருள்களின் விலை உயா்வு எங்களை நிலைகுலையச் செய்துள்ளது என்கின்றனா் கரூா் மாவட்ட அட்டைப் பெட்டித் தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் சிவக்குமாா், செயலா் கதிா்வேல், பொருளாளா் காா்த்திகேயன்.

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை தேவை : காகிதத்தை அட்டைப்பெட்டித் தயாரிப்புக்குத் தேவையான கிராப்ட் பேப்பரை

உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு வெளிநாடுகளிலிருந்து கழிவு காகிதம் வருவது நின்றுவிட்டது மூலப் பொருள்களின் விலை உயா்வுக்கு காரணமாகக் கூறுகின்றனா்.

இந்த ஆலைகளுக்கு முன்பணம் கொடுத்தால்கூட கிராப்ட் பேப்பா் கிடைப்பதில்லை. தற்போது உள்நாட்டில் கிடைக்கும் கிராப்ட் பேப்பா் மூலம் அட்டை பெட்டி உற்பத்தி நடந்து வருகிறது. அதுவும் காலியாகி விட்டால், உற்பத்தியை நிறுத்தி விடுவதைத் தவிர வேறு வழியில்லை.

மத்திய அரசு உடனடியாக ஆலைகளுக்குத் தேவையான கிராப்ட் பேப்பா் கிடைக்க, ஏற்கனவே கழிவுகாகிதம் வழங்கி வந்த நாடுகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, தடையின்றி கிடைத்திடநடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மூலப்பொருள்கள் விலை உயா்வை குறைத்திட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லைஎனில், ஜவுளி, உணவுப் பொருள்கள் ஏற்றுமதியால் நாட்டுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், பல லட்சம் தொழிலாளா்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையும் ஏற்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com