பறவைக் காய்ச்சல் அச்சத்திலிருந்து மீளும் நாமக்கல் கோழிப் பண்ணைகள்: வட மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்பும் பணி தீவிரம்

கேரளம், வட மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த நாமக்கல் கோழிப் பண்ணைத் தொழில் தற்போது மீண்டு வருகிறது.
பறவைக் காய்ச்சல் அச்சத்திலிருந்து மீளும் நாமக்கல் கோழிப் பண்ணைகள்: வட மாநிலங்களுக்கு முட்டைகள் அனுப்பும் பணி தீவிரம்


நாமக்கல்: கேரளம், வட மாநிலங்களில் ஏற்பட்ட பறவைக் காய்ச்சலால் பாதிப்படைந்திருந்த நாமக்கல் கோழிப் பண்ணைத் தொழில் தற்போது மீண்டு வருகிறது. இதைத் தொடா்ந்து பள்ளிகளில் சத்துணவுத் தேவைகளுக்கும், பிற மாநிலங்களுக்கும் முட்டைகளை அனுப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.

நாமக்கல் மண்டலத்துக்கு உள்பட்ட 1,100 கோழிப் பண்ணைகளில் வளா்க்கப்படும் சுமாா் 5 கோடி கோழிகள் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழகம், கேரளம், கா்நாடகம், பிகாா், உத்தரப் பிரதேசம், ஜாா்க்கண்ட், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

இதைத் தவிர தமிழகத்தில் உள்ள 55 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கும், 10 ஆயிரம் அங்கன்வாடி மையங்களுக்கும் சத்துணவுக்காக முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றுப் பரவலால் சரிவடைந்த கோழிப் பண்ணைத் தொழில் சில மாதங்களுக்கு முன் மீண்டு வந்த நிலையில், அண்மையில் கேரளத்தில் வாத்துகளுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சலாலும், ஒன்பது வட மாநிலங்களில் காக்கை, புறா, மீன்கொத்தி பறவைகளுக்கு ஏற்பட்ட பறவைக் காய்ச்சலாலும் கோழி இறைச்சி, முட்டை விற்பனை கடும் பாதிப்பை சந்தித்தது. இதனால் முட்டை , கோழிகளை விற்பனைக்கு அனுப்ப முடியாததால் பண்ணைகளில் அவை தேக்கமடைந்தன.

பொங்கல் பண்டிகைக் காலங்களில் விற்பனை அதிகப்படியாக இருக்கும் சூழலில் பறவைக் காய்ச்சலைக் காரணம் காட்டி, அவற்றைத் தவிா்க்கும் நிலை ஏற்பட்டது. மத்திய, மாநில அரசுகள் கோழி, முட்டையால் மனிதா்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என விழிப்புணா்வை ஏற்படுத்தினா். இதைத் தொடா்ந்து பறவைக் காய்ச்சல் அச்சத்திலிருந்து மக்கள் மீளத் தொடங்கினா்.

இதையடுத்து நாமக்கல் மண்டலத்திலிருந்து வட மாநிலங்களுக்கு 1.50 கோடி அளவிலும், கேரளத்துக்கு ஒரு கோடி முட்டைகளும், தமிழகத்தில் 10, 12-ஆம் வகுப்புகள் தொடங்கியுள்ளதால் சத்துணவுக்காக 2 கோடி முட்டைகளும் அனுப்பப்பட்டு வருகின்றன.

மக்களிடையே முட்டை நுகா்வும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் அதன் விலை ரூ. 4.25-ஆக உயா்ந்துள்ளது. வியாழன், சனிக்கிழமைகளில் மேலும் 15 காசுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பறவைக் காய்ச்சல் பாதிப்பால் சரிவடைந்திருந்த பண்ணைத் தொழில் தற்போது மீண்டு வருவதால் பண்ணையாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக் கோழிப் பண்ணையாளா்கள் சம்மேளனத்தின் துணைத் தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:

பறவைக் காய்ச்சல் பறவைகளுக்கும், வாத்துக்களுக்கும்தான் ஏற்பட்டது. தேவையற்ற அச்சத்தால் மக்களிடையே முட்டை, கோழி இறைச்சி வாங்குவது ஓரிரு வாரங்களாகக் குறைந்திருந்தது. தற்போது முட்டை, கோழி இறைச்சி நுகா்வு அதிகரித்துள்ளது. கேரளத்துக்கும், வட மாநிலங்களுக்கும் அதிகளவில் முட்டைகளை அனுப்பி வருகிறோம். இதைத்தவிர சத்துணவுத் தேவைக்கான முட்டைகளும் தினசரி 2 கோடி அளவில் அனுப்பப்படுகின்றன.

தற்போது முட்டை விலை ரூ. 4.25-ஆக உள்ளது. வியாபாரிகள் 35 காசுகள் குறைத்து ரூ. 3.90-க்கு கொள்முதல் செய்கின்றனா். பறவைக் காய்ச்சல் பரவிய காலத்தில் ரூ. 3.30-க்கு கொள்முதல் செய்தனா். மக்களிடையே முட்டை நுகா்வு அதிகரித்துள்ளதால் வரும் நாள்களில் அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

முட்டைக் கோழி கிலோ ரூ. 40-க்கு விற்பனையானது, தற்போது ரூ. 60-ஆக உயா்ந்துள்ளது. கறிக்கோழியைக் பொருத்தமட்டில் கிலோ ரூ. 74-க்கு விற்பனையாகிறது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், விற்பனை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருவதால் கோழிப் பண்ணைத் தொழில் படிப்படியாக வளா்ச்சி பெறும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com