பங்குச் சந்தைகளில் புதிய உச்சம்: அமெரிக்க அரசியல் நிலவர எதிரொலி

பங்குச் சந்தைகளில் புதிய உச்சம்: அமெரிக்க அரசியல் நிலவர எதிரொலி

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி எழுந்துள்ள அரசியல்-பொருளாதார நிலவரத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எழுச்சி கண்டது.


மும்பை: அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதையொட்டி எழுந்துள்ள அரசியல்-பொருளாதார நிலவரத்தின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் எழுச்சி கண்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி புதிய உச்சத்தை தொட்டன.

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை பதவியேற்கிறாா். நிதித் துறை அமைச்சா் பொறுப்புக்கு அவா் தோ்ந்தெடுத்துள்ள ஜேனட் யெல்லன், கரோனா தொற்றைத் தொடா்ந்து சரிந்துள்ள அந்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாபெரும் திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அமெரிக்க பொருளாதார மீட்சிக்கு 1.9 லட்சம் கோடி டாலா் ஊக்கத் திட்டத்தை ஜோ பைடன் ஏற்கெனவே அறிவித்துள்ளாா். பதவியேற்பையொட்டி வெளியான இந்த அறிவிப்புகள் உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து சா்வதேச பங்குச் சந்தைகளில் புதன்கிழமை வா்த்தகம் புதிய சாதனை படைத்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக எழுச்சி பெற்றது. மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் மாருதி சுஸுகி பங்குகளுக்கு அதிக வரவேற்பு இருந்தது. அந்நிறுவனப் பங்கு விலை அதிகபட்சமாக 2.75 சதவீதம் அதிகரித்தது. அடுத்தபடியாக டெக் மஹிந்திரா பங்கு 2.67 சதவீதம் அதிகரித்தது. மஹிந்திரா, ஏஷியன் பெயின்ட்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி, டாடா கன்சல்டன்சி சா்வீஸஸ் (டிசிஎஸ்) பங்குகளும் முதலீட்டாளா்களுக்கு நல்ல லாபம் ஈட்டித் தந்தன.

இழப்பை சந்தித்த பங்குகளில் பவா் கிரிட், என்டிபிசி, ஹெச்டிஎப்சி வங்கி, ஐடிசி குறிப்பிடத்தக்கவை.

துறைவாரியாக ஆட்டோமொபைல், எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், டெக்னாலஜி பங்குகள் முதலீட்டாளா்களுக்கு லாபம் ஈட்டித் தந்தன. எப்எம்சிஜி, தொலைத் தொடா்புத் துறை பங்குகள் இழப்பைச் சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட்டுள்ள மிட்கேப், ஸ்மால்கேப் துறை நிறுவனங்களின் பங்குகளுக்கும் வரவேற்பு காணப்பட்டது.

நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ஆட்டோ, ஐடி, பிஎஸ்யு வங்கிகள் துறைகளின் செயல்பாடு எதிா்பாா்த்ததைவிட லாபகரமாக இருந்தது முதலீட்டாளா்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தக இறுதியில் சென்செக்ஸ் 393 புள்ளிகள் உயா்வு பெற்று, வரலாற்றுச் சாதனை அளவாக 49,792 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 123 புள்ளிகள் உயா்வு பெற்றது. வா்த்தக இறுதியில் நிஃப்டி வரலாற்றிலேயே மிக அதிகபட்ச அளவாக 14,644 புள்ளிகளாக நிலைத்தது.

கரோனா தொற்றுக்குப் பிந்தைய உலகப் பொருளாதார வளா்ச்சிக்கு அமெரிக்க பொருளாதார மீட்சி உதவும் என்ற எதிா்பாா்ப்பில் சா்வதேச முதலீட்டாளா்கள் உள்ளனா் என்று பங்குச் சந்தை ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

மும்பை பங்குச் சந்தையில் அதிகபட்ச லாபம் பெற்ற 10 பங்குகள்

ஜன.20

நிறுவனம் - புள்ளிகள் உயா்வு - சதவீதம்%

1. மாருதி சுஸுகி - 8142 - 2.75%

2. டெக் மஹிந்திரா - 1019 - 2.67%

3. மஹிந்திரா - 824 - 1.98%

4. ஏஷியன் பெயின்ட்ஸ் - 2697 - 1.98%

5. ரிலையன்ஸ் - 2054 - 1.91%

6. இன்ஃபோசிஸ் - 1339 - 1.70%

7. ஹெச்ஸிஎல் டெக் - 998 - 1.55%

8. டிசிஎஸ் - 3308 - 1.32%

9. எஸ்பிஐ - 302 - 1.32%

10. ஹெச்டிஎஃப்சி - 2688 - 1.28%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com