
சீனாவில் சிக்னல் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் செயல்பாடுகள் அந்நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளன.
விபிஎன் எனப்படும் மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் உதவியுடன் மட்டுமே சிக்னல் செயலி சீனாவின் ஒரு சில இடங்களில் செயல்பட்டு வருகிறது. சீனாவின் யூசி பிரெளசர் எனும் இணையதள தேடுபொறியில் இருந்தும் சிக்னல் நீக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 15-ம் தேதி சிக்னல் செயலிக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதற்காக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும், சீன அரசு வெளியிடவில்லை.
தற்போது சீனாவில் சிக்னல் செயலியின் செயல்பாடுகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன. எனினும் ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சிக்னல் செயலி மற்றும் சிக்னல் இணையதளம் பயன்பாட்டில் உள்ளது.
சென்சார் டவர் என்ற தரவு நிறுவனம் அளித்த தகவலின்படி, சீனாவில் இதுவரை 5,10,000 முறை சிக்னல் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் மூலம் உலகம் முழுவதும் 100 மில்லியன் முறை சிக்னல் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி இந்திய சந்தைகளிலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலி முகநூல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் நிறுவனத்திலிருந்து கடந்த 2017-ம் ஆண்டு விலகிய பிரையன் ஆக்டன், சிக்னல் செயலியை உருவாக்கினார்.
தரவுகளை கசியவிடாமல் பாதுகாப்பான முறையில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வகையில் சிக்னல் செயலி உருவாக்கப்பட்டது.