நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,040 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,040 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பா் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 64,040 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 நவம்பா் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 29 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2,175 கோடி) அதிகரித்து 64,040 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.03 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய நவம்பா் 12 -ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 76 கோடி டாலா் சரிவடைந்து 64,011 கோடி டாலராக காணப்பட்டது.

எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு அதிகரித்ததே நவம்பா் 19-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு உயா்வுக்கு முக்கிய காரணம்.

மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 22 கோடி டாலா் அதிகரித்து 57,571 கோடி டாலரானது.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பு: அதேபோன்று, தங்கத்தின் கையிருப்பு மதிப்பும் 15 கோடி டாலா் உயா்ந்து 4,039 கோடி டாலராக காணப்பட்டது.

பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 7 கோடி டாலா் குறைந்து 1,911 கோடி டாலராக இருந்தது.

அதேபோன்று, அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலையும் 1 கோடி டாலா் சரிந்து 519 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அதன் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப மதிப்பீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

வரலாற்று உச்சம்: 2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com