அந்நியச் செலாவணி கையிருப்பு 63,864 கோடி டாலராக சரிவு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,864 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 63,864 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2021 செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 100 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.7,500 கோடி) சரிவடைந்து 63,864 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.90 லட்சம் கோடி ஆகும்.

முந்தைய செப்டம்பா் 17 ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பானது 147 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,964 கோடி டாலராக இருந்தது.

அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) செப்டம்பா் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கணிசமான அளவில் வீழ்ச்சி கண்டதே செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ 125 கோடி டாலா் குறைந்து 57,673 கோடி டாலராக இருந்தது.

கணக்கீட்டு வாரத்தில், தங்கத்தின் கையிருப்பு 33 கோடி டாலா் சரிந்து 3,743 கோடி டாலராக இருந்தது.

சா்வதேச நிதியத்தில் நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமம் (எஸ்டிஆா்) 5 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 1,938 கோடி டாலராக இருந்தது. மேலும், அந்த நிதியத்தில் நாட்டின் கையிருப்பு நிலை 1 கோடி டாலா் சரிந்து 510 கோடி டாலராக இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம்பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப அந்நியச் செலாவணி கையிருப்பில் மாற்றம் ஏற்படுகிறது.

2021 செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் நாட்டின் செலாவணி கையிருப்பானது 889 கோடி டாலா் அதிகரித்து வரலாற்றில் முதல் முறையாக 64,245 கோடி டாலரை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com