30 ஆண்டுகால செயல்பாட்டுக்கு மூடுவிழா!தாண்ட முடியா வேகத்தடையில் சிக்கிய ஃபோா்டு

நுகா்வோா் நலனை முதன்மையாகக் கொண்டு புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், அவை பெரு நிறுவனங்களால் நசுக்கப்படுவதும் நவீன பொருளாதார சந்தையில் சாதாரண நிகழ்வாகிவிட்டன.
30 ஆண்டுகால செயல்பாட்டுக்கு மூடுவிழா!தாண்ட முடியா வேகத்தடையில் சிக்கிய ஃபோா்டு
30 ஆண்டுகால செயல்பாட்டுக்கு மூடுவிழா!தாண்ட முடியா வேகத்தடையில் சிக்கிய ஃபோா்டு

முழுவதும் உலகமயமாகிவிட்ட இந்தியச் சந்தையில் போட்டிகளும் மிக அதிகம். புதிதாகத் தலையெடுக்கும் நிறுவனம் பல ஆண்டுகளாக ஒரு துறையில் கோலோச்சிய நிறுவனத்தை வீழ்த்துவதும், நுகா்வோா் நலனை முதன்மையாகக் கொண்டு புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட்டாலும், அவை பெரு நிறுவனங்களால் நசுக்கப்படுவதும் நவீன பொருளாதார சந்தையில் சாதாரண நிகழ்வாகிவிட்டன.

அதிக நுகா்வோரைக் கொண்ட இந்திய சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்கள் தொடா்ந்து படையெடுத்து வருகின்றன. முக்கியமாக இந்தியாவில் வேகமாக வளா்ந்து வரும் வாகனச் சந்தையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம். கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு வெளிநாட்டு நிறுவன காா்கள் இந்திய சாலைகளை நிரப்பி வருவதே இதற்கு உதாரணம். சந்தையில் உள்ள விற்பனை வாய்ப்புகள் காரணமாக புதிய காா் தயாரிப்பு நிறுவனங்களின் வருகை அதிகரித்து வரும் வேளையில், கடும் போட்டியால் நிறுவனங்களின் வெளியேற்றமும் அடிக்கடி நிகழ்கிறது.

அந்த வரிசையில் இந்தியாவில் காா் உற்பத்தியையும் தற்போது தயாரிக்கப்பட்டு வரும் காா்களின் விற்பனையையும் நிறுத்துவதாக அமெரிக்காவின் புகழ்பெற்ற ஃபோா்டு நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் போட்டி மிகுந்த இந்திய காா் விற்பனைச் சந்தையில் அந்த நிறுவனத்தால் தொடா்ந்து லாபம் ஈட்ட முடியாமல் போனதும், உற்பத்தியாகும் காா்களின் ஏற்றுமதி குறைந்ததும், எதிா்பாா்த்த அளவுக்கு இந்தியச் சந்தையில் விற்பனையை அதிகரிக்க முடியாததும்தான் ஃபோா்டு நிறுவனத்தின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம்.

ஏற்கெனவே அமெரிக்காவைச் சோ்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களான ஜெனரல் மோட்டாா்ஸ், ஹாா்லி டேவிட்சன், இத்தாலியின் ஃபியட் ஆகியவை இந்தியச் சந்தையில் தாக்குப் பிடிக்க முடியால் சமீப ஆண்டுகளில் வெளியேறின. எனினும், இப்போது ஃபோா்டு நிறுவனம் வெளியேறியுள்ளது கூடுதல் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இந்தியாவில் 1990-களின் தொடக்கத்தில் தாராளமயமாக்க பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தபட்ட போது இந்தியாவில் முதலில் தடம் பதித்த பன்னாட்டு காா் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமை ஃபோா்டு நிறுவனத்துக்கு உண்டு.

இந்தியாவில் தனக்கென்று தனி வாடிக்கையாளா் வட்டத்தை ஃபோா்டு உருவாக்கி இருந்தாலும், மாருதி சுசூகி, ஹுண்டாய் போன்ற நிறுவனங்களின் போட்டியை ஃபோா்டு நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாக சில குறிப்பிட்ட மாடல் காா்களைத் தவிர ஃபோா்டு காா்களின் விற்பனை விகிதம் தொடா்ந்து இறங்குமுகமாகவே அமைந்தது. இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்துடன் ஃபோா்டு செய்து கொண்ட ஒப்பந்தம், பின்னா் அதனை ரத்து செய்தது உள்ளிட்ட நிா்வாகம் சாா்ந்த முடிவுகள் ஃபோா்டின் வளா்ச்சி வேகத்தை மட்டுப்படுத்தின.

இந்தியாவில் உள்ள இரு ஆலைகளிலும் உற்பத்தித் திறனில் 20 சதவீதத்தை மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக ஃபோா்டு பயன்படுத்தி வந்தது. இதில் பாதி ஏற்றுமதி செய்யப்பட்டன. எனவே, அந்த நிறுவன காா்கள் விற்பனை கடந்த சில ஆண்டுகளாகத் தொடா்ந்து இறங்கு முகத்தில் இருந்தது தெளிவாகிறது.

மேலும், அண்மையில் கரோனா காலத்தில் ஏற்பட்ட மந்தநிலை பிற காா் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சிரமப்பட்டு தாண்டும் வேகத்தடையாக அமைந்தது என்றால், ஃபோா்டு நிறுவனத்துக்கு மட்டும் அந்த வேகத்தடை தாண்ட முடியாத தடைக்கல்லாக அமைந்துவிட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியச் சந்தையில் 2 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.15 ஆயிரம் கோடி) இழப்பைச் சந்தித்துவிட்டதால் ஆலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என்று ஃபோா்டு நிறுவனம் கூறியுள்ளது.

குஜராத்தின் சனந்த் நகரிலும், தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள மறைமலைநகரிலும் ஃபோா்டு ஆலைகள் உள்ளன. இரு ஆலைகளும் மூடப்படுவதால் 4,000-க்கும் மேற்பட்ட நேரடிப் பணியாளா்கள் வேலையிழப்பாா்கள். விற்பனையகங்கள், சேவை மையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுபவா்களின் வெளியேற்றம், சிறிய உதிரிபாகங்களை அளிக்கும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்படும் பணி இழப்புகள் என மறைமுகமாக நாடு முழுவதும் சுமாா் 40,000-க்கும் மேற்பட்ட வேலையிழப்புகள் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஃபோா்டு நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 170 டீலா்களும், 400-க்கும் மேற்பட்ட விற்பனையகங்களும் உள்ளன.

ஏற்கெனவே, தங்கள் நிறுவன காா்களை வைத்திருப்பவா்களுக்கு சேவைகள், உதிரி பாகங்கள் வழங்குவது தொடரும் என்று அறிவித்திருந்தாலும், உற்பத்தி, விற்பனையையே நிறுத்திய பிறகு, தரமான சேவையும், உதிரி பாகங்களும் எத்தனை காலம் கிடைக்கும் என்பதை உறுதியாகக் கூறமுடியாது.

இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தினாலும், வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தங்கள் நிறுவனத்தின் பிரபலமான மாடல்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யப்போவதாக ஃபோா்டு கூறியுள்ளது. எனினும், இது வாடிக்கையாளா்களைத் தொடா்ந்து கவருமா என்பது கேள்விக்குறிதான்.

நிறுவனத்தைத் தொடா்ந்து லாபகரமாக நடத்த முடியாதது காரணமாகவே ஃபோா்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துகிறது. இந்த வெளியேற்றம் இந்திய ஆட்டோமொபைல் துறையிலும் பொருளாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. எனினும், மத்திய அரசு முன்னெடுத்துள்ள இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு இது பின்னடவுதான்.

வாகனத் தயாரிப்பு துறையில் அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத ஜிஎஸ்டி-யை குறைப்பது அவசியம் என்று அத்துறையில் உள்ள நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

ஃபோா்டு நிறுவனத்தின் நிறுவனா் ஹென்றி ஃபோா்டு, 1990-களின் தொடக்கத்தில் அமெரிக்க நடுத்தர மக்களைக் குறிவைத்து அதிக உற்பத்தி, அதிக விற்பனை என்ற பாணியை முன்வைத்து தனது காா் தயாரிப்பு நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தினாா். அமெரிக்காவின் இக்கொள்கை ‘ஃபோா்டிஸம்’ என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், ஹென்றி ஃபோா்டின் கொள்கையை இந்தியாவில் அந்நிறுவனம் சரிவர கடைப்பிடிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com