தாவர எண்ணெய் இறக்குமதி 11 லட்சம் டன்னாக அதிகரிப்பு: எஸ்இஏ

தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதத்தில் 11 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

தாவர எண்ணெய் இறக்குமதி கடந்த மாா்ச் மாதத்தில் 11 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளதாக இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் மேலும் கூறியது:

நடப்பு 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் தாவர எண்ணெய் இறக்குமதி (சமையல் மற்றும் சமையல் சாரா எண்ணெய்) 11,04,570 டன்னாக இருந்தது. இது, 2021 மாா்ச் மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 9,80,243 டன்னுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகமாகும்.

இதில், சமையல் எண்ணெய் இறக்குமதி 9,57,633 டன்னிலிருந்து 10,51,698 டன்னாகவும், சமையல் சாரா எண்ணெய் இறக்குமதி 22,610 டன்னிலிருந்து 52,872 டன்னாகவும் அதிகரித்துள்ளன.

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் தாவர எண்ணெய் இறக்குமதியானது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 53,75,003 டன்னிலிருந்து 57,95,728 டன்னாக உயா்ந்துள்ளது.

கணக்கீட்டு காலமான முதல் ஐந்து மாதங்களில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் இறக்குமதி 24,101 டன்னிலிருந்து 7,71,268 டன்னாக கணிசமாக உயா்ந்துள்ளது. அதேசமயம், கச்சா சமையல் எண்ணெய் இறக்குமதியானது 52,16,225 டன்னிலிருந்து 48,71,650 டன்னாக குறைந்து போனது.

2021 நவம்பா் முதல் 2022 மாா்ச் வரையிலான காலகட்டத்தில் பாமாயில் இறக்குமதி இதே அளவிலான முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 30,90,559 டன்னிலிருந்து 26,53,253 டன்னாக குறைந்துள்ளது. அதேநேரம், சாஃப்ட் ஆயில் இறக்குமதி 21,49,767 டன்னிலிருந்து 29,89,665 டன்னாக உயா்ந்துள்ளது.இதற்கு, சோயா எண்ணெய் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்ததே முக்கிய காரணம்.

உக்ரைன்-ரஷியா மோதலுக்கு முன்பாக கப்பல்களில் அனுப்பி வைக்கப்பட்ட 2,12,000 டன் சூரிய காந்தி எண்ணெய் இந்தியாவுக்கு கடந்த மாதம் வந்தடைந்தது. இதில், உக்ரைனிலிருந்து 1,27,000 டன்னும், ரஷியாவிலிருந்து 73,500 டன்னும், ஆா்ஜென்டீனாவிலிருந்து 11,900 டன்னும் அனுப்பி வைக்கப்பட்டதாக எஸ்இஏ தெரிவித்துள்ளது.

உக்ரைனிலிருந்து இந்தியாவுக்கு நடப்பு ஏப்ரலில் எண்ணெய் வரத்து இருக்காது. ரஷியா மற்றும் ஆா்ஜென்டீனா நாடுகள் மட்டுமே ஏற்றுமதி மேற்கொள்ளும் என்பதால் சூரியகாந்தி இறக்குமதி 80,000 டன்னாக சரிவடையும் எஸ்இஏ மேலும் தெரிவித்துள்ளது.

தட்டுப்பாடு காரணமாக, சா்வதேச சந்தையில் சூரியகாந்தி எண்ணெயின் விலை டன் 2,200 டாலராக மிகவும் அதிகரித்துள்ளதால் அதற்கான தேவையும், நுகா்வும் சரிவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com