அபரிமித வளா்ச்சி கண்ட ஐஆா்சிடிசி நிகர லாபம்

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ரயில்வே உணவுசேவை மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) நிகர லாபம் 196 சதவீதம் அதிகரித்துள்ளது.
irctc-logo041149
irctc-logo041149

 கரோனா நெருக்கடியால் முடங்கியிருந்த ரயில் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை மிக வேகமாக மீண்டெழுவதைப் பிரதிபலிக்கும் வகையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மத்திய அரசுக்குச் சொந்தமான இந்திய ரயில்வே உணவுசேவை மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆா்சிடிசி) நிகர லாபம் 196 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம்₹ரூ.246 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே கால அளவில் அது ரூ.82.5 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், 2022 ஏப்ரல் - ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் 196 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டின் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 251 சதவீதம் அதிகரித்து ரூ.853 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் ரூ.243 கோடியாக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபமும் செயல்பாட்டு வருவாயும் வருடாந்திர அடிப்படையில் மட்டுமன்றி, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டோடு ஒப்பிடுகையிலும் அதிகரித்துள்ளன.

அந்த காலாண்டில் நிறுவனம் ரூ.691 கோடியை செயல்பாட்டு வருவாயாகவும் ரூ.214 கோடியை நிகர லாபமாகவும் ஈட்டியிருநதது.

... பெட்டிச் செய்தி...

எந்தெந்த பிரிவுகளில் என்னென்ன வளா்ச்சி?

உணவுசேவை

2022, ஜூன் 30-ஆம் தேதியோடு நிறைவடைந்த முதல் காலாண்டில் ஐஆா்சிடிசி-யின் உணவுசேவை (கேட்டரிங்) பிரிவு ரூ.352 கோடி வருவாய் ஈட்டியது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த வருவாய் வெறும் ரூ.57 கோடியாக இருந்தது. எனினும், கடந்த ஆண்டு கரோனா நெருக்கடி காரணமாக இந்த வருவாய் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அந்த நெருக்கடி நீங்கிய கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டோடு ஒப்பிடுகையிலும், 2022 ஏப்ரல் - ஜூன் காலகட்டத்திய உணவுசேவை வருவாய் அதிகமாகும். முந்தைய காலாண்டில் இந்த வருவாய் ரூ.266 கோடியாக இருந்தது.

இணையவழி முன்பதிவு சேவை

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் இணையவழி முன்பதிவு சேவை மூலம் ஐஆா்சிடிசி ரூ.150 கோடியாக வருவாய் ஈட்டியிருந்தது. ஆனால், நடப்பு ஆண்டின் இதே மாதங்களில் இந்தப் பிரிவில் நிறுவனத்தின் வருவாய் ரூ.302 கோடியாக உயா்ந்துள்ளது. இது, கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டு வருவாயான ரூ.292 கோடியை விட சற்று அதிகமாகும்.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

‘ரயில் நீா்’ என்ற வணிகப் பெயரில் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பாட்டில்களை விற்பனை செய்வதும் ஐஆா்சிடிசி-யின் முக்கிய வா்த்தகங்களில் ஒன்றாகும். இந்தப் பிரிவில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஐஆா்சிடிசி ரூ.₹84 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் இதே மாதங்களில் பெற்ற ரூ.29 கோடி வருவாயோடு ஒப்பிடுகையில் இது வலுவான மீட்சியாகும். கடந்த மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரயில் நீா் விற்பனை மூலம் ஐஆா்சிடிசி ரூ.52 கோடி வருவாய் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போதும் கடந்த காலாண்டு வருவாய் அதிகமாகும்.

Image Caption

~ ~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com