
அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிவைச் சந்தித்தது.
இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியது:
சா்வதேச சந்தையில் டாலருக்கான தேவை உயா்ந்துள்ளது. இந்த நிலையில், உள்நாட்டிலிருந்து அதிக அளவில் அந்நியச் செலாவணி வெளியேறி வருகிறது.
இவைதவிர, இறக்குமதியாளா்கள் சாா்பாக வங்கிகள் டாலரை அதிக அளவில் வாங்கி வருவது மற்றும் பலவீனமான பொருளாதார புள்ளிவிவரங்கள் ஆகியவையும் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக, தொடா்ந்து இரண்டாவது நாளாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைச் சந்தித்தது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 74.18-ஆக இருந்தது. இது வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 74.16 வரையிலும், குறைந்தபட்சமாக 74.36 வரையிலும் சென்றது.
வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து 74.25-இல் நிலைபெற்றது. முந்தைய வா்த்தக தினத்தில் ரூபாய் மதிப்பு 74.15-ஆக இருந்தது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
கச்சா எண்ணெய் பேரல் 85.83 டாலா்
சா்வதேச முன்பேர சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து 85.83 டாலருக்கு வா்த்தகம் செய்யப்பட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.
வெளியேறிய அந்நிய முதலீடு
மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவனங்கள் ரூ.1,598.20 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.