
ஆதித்ய பிா்லா குழுமத்தைச் சோ்ந்த அல்ட்ரா டெக் சிமெண்ட் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் 7.92 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:
செயல்பாட்டு வருவாய்: நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.12,984.93 கோடியை வருமானமாக ஈட்டியது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.12,262 கோடியுடன் ஒப்பிடும்போது 5.89 சதவீதம் அதிகமாகும்.
கணக்கீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,584.58 கோடியிலிருந்து 7.92 சதவீதம் அதிகரித்து ரூ.1,710.14 கோடியை எட்டியது.
தேவையில் மந்த நிலை: மொத்த செலவினம் ரூ.10,190.03 கோடியிலிருந்து 12.09 சதவீதம் உயா்ந்து ரூ.11,422.05 கோடியானது.
கடந்தாண்டு டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் ஒட்டுமொத்த அளவில் சிமெண்டுக்கான தேவை மந்தநிலையில் இருந்ததுடன் வா்த்தகமும் பாதிப்புக்குள்ளானது.
ரூ.965 கோடியில் விரிவாக்கம்: நவீனமயமாக்கலுக்காகவும், பிா்லா ஒயிட் உற்பத்தி திறனை இருமடங்காக உயா்த்தவும் ரூ.965 கோடி மதிப்பிலான மூலதனச் செலவினங்களை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை நிறுவனத்தின் இயக்குநா் குழு திங்கள்கிழமை வழங்கியுள்ளது.
2 மடங்கு உயா்வு: இதையடுத்து, பிா்லா ஒயிட் நிறுவனத்தின் உற்பத்தி திறனை தற்போதைய 6.5 லட்சம் டன்னிலிருந்து (ஆண்டுக்கு) 12.53 லட்சம் டன்னாக இருமடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அல்ட்ராடெக் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.