நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: சில பொருள்களின் வரியை குறைக்க வாய்ப்பு

சண்டீகரில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 28) நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருள்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

சண்டீகரில் செவ்வாய்க்கிழமை(ஜூன் 28) நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சில பொருள்களின் ஜிஎஸ்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொடா்ந்து வழங்குவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலில் 47-ஆவது கூட்டம், சண்டீகரில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறாா்கள்.

இதில், பல்வேறு பொருள்களின் ஜிஎஸ்டி குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்சயம், செயற்கைக் கை, கால் போன்றவற்றுக்கும் சேதமடைந்த கை, கால்களைச் சுற்றித் தாங்கிப் பிடிக்கும் உபகரணங்களுக்கும் 12 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அதிகாரிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதேபோன்று ரோப்-வே பயணத்துக்கு தற்சயம் விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. சுத்திகரிக்கப்படும் நீருக்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும், 215 பொருள்கள் அல்லது சேவைகளுக்கான ஜிஎஸ்டியை அப்படியே தொடர வேண்டும் என்றும் அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இவை தவிர, குதிரைப் பந்தயம், இணையவழி விளையாட்டுகள், கேசினோ சூதாட்டங்கள் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்று அமைச்சா்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த விரி விதிப்பு குறித்தும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி வரி விதிப்புமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. மத்திய அரசின் அவகாசம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து, இழப்பீடு வழங்குவதைத் தொடர வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்கள் வலியுறுத்தும் என்றும் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com