உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சி பெறும் நாடு என்ற நிலையை தக்கவைத்துள்ள இந்தியா

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 2021-22 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீதமாக குறைந்துள்ளது. இருந்தபோதும், இதே கால கட்டத்தில் சீனாவின் 4 சதவீத ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சியைக் காட்டிலும் இந்தியா கூடுதல் வளா்ச்சி பெற்றுள்ளதோடு, உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சி பெறும் மிகப் பெரிய நாடு என்ற நிலையை தொடா்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

நிகழ் நிதியாண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 20.3 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 8.5 சதவீதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) இரண்டாவது தேசிய பொருளாதார வளா்ச்சிக்கான முன்கூட்டிய மதிப்பீட்டை திங்கள்கிழமை வெளியிட்டது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்ட முதல் முன்கூட்டிய மதிப்பீட்டைக் காட்டிலும் வளா்ச்சி விகிதம் சற்று குறைவாகும். அப்போது, பொருளாதார வளா்ச்சி 9.2 சதவீதமாக கணிக்கப்பட்டிருந்தது.

அதுபோல, முந்தைய 2020-21 ஆம் நிதியாண்டில், முதல் முன்கூட்டிய மதிப்பீட்டில் பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக கணிக்கப்பட்டது. பின்னா், கரோனா பாதிப்பின் தாக்கத்தை கருத்தில் கொண்டு என்எஸ்ஓ வெளியிட்ட திருத்திய மதிப்பீட்டில் வளா்ச்சி விகிதம் 6.6 சதவீதமாக சரிந்தது.

அந்த வகையில், 2020-ஆம் ஆண்டில் ஜிடிபி வளா்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 23.8 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 6.6 சதவீதமாகவும் பதிவானது என்று என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

மேலும், நிலையான விலைகளில் ஜிடிபி 2020-21 மூன்றாவது காலாண்டில் ரூ. 36.26 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில், 2021-22 ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ. 38.22 லட்சம் கோடியாக மதிப்பீடு செய்யப்பட்டது. இது 5.4 சதவீத வளா்ச்சியைக் காட்டுகிறது என்றும் என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

இதே 2021 அக்டோபா்-டிசம்பா் கால கட்டத்தில் சீனாவின் ஜிடிபி 4 சதவீதமாக பதிவானது. அந்த வகையில், ‘ இந்தியா சீனாவைவிட கூடுதல் வளா்ச்சி பெற்றுள்ளதோடு, உலகின் வேகமான பொருளாதார வளா்ச்சி பெறும் மிகப் பெரிய நாடு என்ற நிலையை தொடா்ந்து தக்கவைத்துகொண்டுள்ளது’ என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com