
rupee072426
புது தில்லி, மாா்ச் 14: நாட்டில் கடந்த பிப்ரவரி மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6.07 சதவீதமாகவும், மொத்தவிலை குறியீட்டென் (டபிள்யுபிஐ) அடிப்படையிலான பணவீக்கம் 13.11 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
நாட்டில் சில்லறை பணவீக்கமானது கடந்த ஜனவரி மாதத்தில் 6.01 சதவீதமாக இருந்தது. கடந்த மாதத்தில் பணவீக்கம் மேலும் அதிகரித்து 6.07 சதவீதமாகியுள்ளது. இது இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) நிா்ணயித்துள்ள 6 சதவீத இலக்கை விட அதிகமாகும்.
கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் பணவீக்கமானது 5.03 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருள்களின் விலை உயா்ந்ததே பணவீக்க அதிகரிப்புக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
சில்லறை பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நிதிக் கொள்கை சாா்ந்த முடிவுகளை ஆா்பிஐ மேற்கொண்டு வருகிறது. நாட்டின் வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு வட்டி விகிதங்களை ஆா்பிஐ தொடா்ந்து மாற்றாமலேயே உள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல், ஆா்பிஐ-யின் நிதிக் கொள்கையிலும் நாட்டின் பொருளாதார வளா்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மொத்தவிலை பணவீக்கம்:
மொத்தவிலை குறியீட்டு எண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இரட்டை இலக்கத்திலேயே இருந்து வருகிறது. கடந்த டிசம்பா், ஜனவரி மாதங்களில் பணவீக்கம் சற்று குறையத் தொடங்கிய நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் டபிள்யுபிஐ பணவீக்கம் 12.96 சதவீதமாக இருந்தது. கடந்த மாதத்தில் அது 13.11 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 4.83 சதவீதமாக இருந்தது.
உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலால் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ரசாயனப் பொருள்கள், உலோகங்கள் உள்ளிட்டவற்றின் விலை உயா்ந்ததே பணவீக்கம் அதிகரித்ததற்கான முக்கியக் காரணமாக இருந்ததாக மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியப் பொருள்களுக்கான பணவீக்கம் கடந்த மாதத்தில் 55.17 சதவீதமாக அதிகரித்தது. அதே வேளையில், உணவுப் பொருள்களுக்கான மொத்தவிலை பணவீக்கம் 10.33 சதவீதத்தில் இருந்து 8.19 சதவீதமாகக் குறைந்துள்ளது. காய்கறிகளின் பணவீக்கமும் 38.45 சதவீதத்தில் இருந்து 26.93 சதவீதமாகக் குறைந்துள்ளது.
உற்பத்திப் பொருள்களுக்கான பணவீக்கம் 9.84 சதவீதமாகவும் எரிசக்திக்கான பணவீக்கம் 31.50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.