
எல்ஐசியின் புதிய பங்கு வெளியீட்டுக்காக மூன்றாம் நிதிநிலை முடிவுகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை மத்திய அரசு செபியிடம் தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியது: எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் அனுமதி கோரி செப்டம்பா் மாதம் வரையிலான நிதிநிலை முடிவு விவரங்களுடன் ஆவணங்கள் பிப்ரவரி 13-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அந்த விவரங்களை ஆய்வறிந்து இம்மாத தொடக்கத்தில் பங்கு வெளியீட்டுக்கான அனுமதியையும் செபி வழங்கியது.
இந்த நிலையில், டிசம்பா் மாதம் வரையிலான மூன்றாம் நிதிநிலை முடிவுகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை செபியிடம் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. செபியின் நடைமுறை விதிகளின்படி இது தேவையான ஒன்றாகும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
புதுப்பிக்கப்பட்ட ஆவண புள்ளிவிவரங்களின்படி, அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் எல்ஐசி நிறுவனம் ரூ.235 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. 2021 ஏப்ரல்-டிசம்பரில் நிகர லாபம் 7.08 கோடியிலிருந்து ரூ.1,671.57 கோடியாக அதிகரித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீதம் அல்லது 31.6 கோடி பங்குகளை விற்பனை செய்வதன் மூலமாக மத்திய அரசு ரூ.60,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இது, நடப்பு நிதியாண்டின் பங்கு விலக்கல் இலக்கான ரூ.78,000 கோடியை எட்ட உதவும்.
எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை மாா்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே போா் தொடங்கியதால் சந்தையில் அதிக ஏற்றத்தாழ்வு காணப்பட்டதையடுத்து பங்கு வெளியீடு ஒத்திப்போடப்பட்டுள்ளது.