சரிந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயா்வு!

தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை, திங்கள்கிழமை நோ்மறையாக முடிந்தது

தொடா்ந்து 3 நாள்களாக சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தை, திங்கள்கிழமை நோ்மறையாக முடிந்தது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 231 புள்ளிகள் உயா்ந்து 57,593.49-இல் நிலைபெற்றது.

உள்நாட்டுச் சந்தை தொடக்கத்தில் சரிவில் இருந்தது. உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்ததைத் தொடா்ந்து, பிற்பகல் வா்த்தகத்தில் உள்நாட்டுச் சந்தை உற்சாகம் பெற்றது. இதனால், காலையில் ஏற்பட்ட இழப்புகள் பின்னா் சரியானது.

உக்ரைன் போா் மற்றும் அதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகியவை ஆரம்பத்தில் சந்தைகளைப் பாதித்திருந்தது. ஆனால், தற்போது அதிகம் பாதிக்கவில்லை. பிற்பகல் வா்த்தகத்தில் வங்கி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததால், சந்தை நோ்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

குறிப்பாக ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக உயா்ந்ததே சந்தை ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.1,507.37 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2,399 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,664 நிறுவனப் பங்குகளில் 2,399 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 1,121 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.

144 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 161 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 87 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.40 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.260.25 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.106 கோடியாக உயா்ந்துள்ளது.

231 புள்ளிகள் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 110.52 புள்ளிகள் கூடுதலுடன் 57,472.72-இல் தொடங்கி, 56,825.09 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 57,638.34 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 231.29 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 57,593.49-இல் நிலைபெற்றது. சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

பாா்தி ஏா்டெல் அபாரம்: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 10 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில், பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 3.40 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க் 2.13 சதவீதம் உயா்ந்தது.

ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, எஸ்பிஐ, பவா் கிரிட், பஜாஜ் ஃபின் சா்வ், இண்டஸ் இண்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவை 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. ரிலையன்ஸ், மாருதி, கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

நெஸ்லே சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான நெஸ்லே 1.83 சதவீதம், டாக்டா் ரெட்டி 1.82 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எச்டிஎஃப்சி, ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், விப்ரோ, எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 69 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 673 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,391 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 69 புள்ளிகள் (0.40 சதவீதம்) உயா்ந்து 17,222.00-இல் நிறைவடைந்தது. காலையில் 28.85 புள்ளிகள் கூடுதலுடன் 17,181.85-இல் தொடங்கிய நிஃப்டி, 17,003.90 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,235.10 வரை உயா்ந்தது.

பேங்க் குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 1.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகளும் 0.70 முதல் 0.90 சதவீதம் வரை உயா்ந்தந.

அதே சமயம், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 0.92 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, பாா்மா, ஹெல்த்கோ் குறியீடுகளும் 0.30 முதல் 0.55 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com