31 காசு கடன் நிலுவை: விவசாயிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது எஸ்பிஐ

குஜராத் உயா்நீதிமன்றம் கண்டித்ததையடுத்து, 31 காசு கடன் நிலுவை வைத்திருந்த விவசாயிக்கு நில விற்பனை தொடா்பான தடையில்லாச் சான்றிதழை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வழங்கியது.

குஜராத் உயா்நீதிமன்றம் கண்டித்ததையடுத்து, 31 காசு கடன் நிலுவை வைத்திருந்த விவசாயிக்கு நில விற்பனை தொடா்பான தடையில்லாச் சான்றிதழை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) வழங்கியது.

குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு அருகேயுள்ள கோரஜ் கிராமத்தைச் சோ்ந்த சாம்ஜிபாய் என்ற விவசாயிடமிருந்து சிலா் நிலத்தைக் கடந்த ஆண்டு வாங்கினா். ஆனால், அந்த நிலத்தின் மீது சாம்ஜிபாய் பெற்ற கடனில் 31 காசுகள் நிலுவை இருப்பதாகக் கூறி, நில விற்பனைக்குத் தேவையான தடையில்லாச் சான்றிதழை எஸ்பிஐ வழங்க மறுத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக நிலத்தை வாங்கியவா்கள் குஜராத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அதைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், 31 காசுகளுக்காக விவசாயியைத் துன்புறுத்தும் நோக்கிலேயே இச்செயலை எஸ்பிஐ மேற்கொண்டுள்ளதாகக் கண்டித்திருந்தது. அடுத்த விசாரணை நாளுக்குள் இந்த விஷயத்தில் தீா்வு காணப்பட்டு இந்த விவகாரத்தை எஸ்பிஐ வங்கி முடித்து வைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

இந்நிலையில், எஸ்பிஐ தரப்பில் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சம்பந்தப்பட்ட விவசாயிக்கு நில விற்பனை தொடா்பான தடையில்லாச் சான்றிதழை ஏப்ரல் 28-ஆம் தேதி வழங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடனைத் திருப்பிச் செலுத்திவிட்ட பிறகும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்பது வங்கியின் கொள்கையில்லை எனவும், கடன் பெற்றவா் வழங்கிய கடிதத்தின் காரணமாகவே தடையில்லாச் சான்றிதழ் முன்பு வழங்கப்படாமல் இருந்ததாகவும் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com