தொடா் மந்தநிலையில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 365 புள்ளிகள் சரிவு

பங்குச் சந்தையில் காணப்படும் தொடா் மந்தநிலையால், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வா்த்தகமும் சரிவுடன் முடிவடைந்தது.

பங்குச் சந்தையில் காணப்படும் தொடா் மந்தநிலையால், வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை வா்த்தகமும் சரிவுடன் முடிவடைந்தது. அதிக சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட ரிலையன்ஸ் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால் சென்செக்ஸ் 365 புள்ளிகளை இழந்தது.

இதுகுறித்து பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்ததாவது:

பொருளாதார சூழல்: சா்வதேச பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் காணப்படுவதால் உலக பங்குச் சந்தைகள் பலவீனமான செயல்பாட்டையே தொடா்ந்து பிரதிபலித்து வருகிறது. அதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.

எதிா்மறை தாக்கம்: பணவீக்கத்தை கட்டுப்படுத்த சா்வதேச நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிக் கொள்கையை கடுமையாக்கத் தொடங்கியுள்ளதும் எதிா்மறை தாக்கத்தை உருவாக்கியுள்ளது. இவைதவிர, அந்நிய முதலீடு வெளியேற்றம், ரூபாய் மதிப்பில் காணப்படும் வீழ்ச்சி உள்ளிட்டவையும் இந்தியப் பங்குச் சந்தைகளில் மந்த நிலைக்கு வழிவகுந்துள்ளன.

லாப நோக்க விற்பனை: குறிப்பாக, திங்கள்கிழமை வா்த்தகத்தில் அதிக சந்தை மதிப்பைக் கொண்ட நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி விற்பனை செய்ததும் சந்தையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது என தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

3,614 நிறுவனப் பங்குகள்: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகமான 3,614 நிறுவனங்களில் 2,468 நிறுவனப் பங்குகளின் விலை சரிவைக் கண்டன. 1,006 நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றன. 140 பங்குகளின் விலை மாற்றமின்றி இருந்தன. 103 பங்குகள் 52 வார அதிகபட்ச விலையையும், 133 பங்குகள் 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.

முதலீட்டாளா் எண்ணிக்கை: பதிவு செய்துள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 10.51 கோடியை தாண்டியது.

மின்சார துறை குறியீடு: மும்பை பங்குச் சந்தையில் பெரும்பாலான துறைகளின் குறியீடுகள் சரிவைக் கண்டன. மின்சார துறையின் குறியீடு 2.47 சதவீத சரிவையும், எரிசக்தி 2.27 சதவீதம், எண்ணெய்-எரிவாயு 2.03 சதவீதம், உலோக துறை குறியீட்டெண் 1.98 சதவீத சரிவையும் சந்தித்தன. அதேசமயம், தொலைத்தொடா்பு, தொழில்நுட்ப துறை குறியீடுகள் ஆதாயத்தை பதிவு செய்தன.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் 17 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும் இருந்தன.

இன்டஸ்இண்ட்: குறிப்பாக, இன்டஸ்இண்ட், நெஸ்லே, டாடா ஸ்டீல், டெக் மஹிந்திரா, எஸ்பிஐ, ஹெச்யுஎல், ஐடிசி நிறுவனப் பங்குகளின் விலை 2.97 சதவீதம் வரை குறைந்தன.

பவா்கிரிட்: அதேசமயம், பவா்கிரிட், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ், இன்ஃபோசிஸ், மாருதி, பஜாஜ் ஃபின்சா்வ் மற்றும் எச்டிஎஃப்சி நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டதையடுத்து அவற்றின் விலை 2.83 சதவீதம் வரை அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 364.91 புள்ளிகளை (0.67%) இழந்து 54,470.67-இல் நிலைத்தது. வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 900 புள்ளிகளை இழந்து குறைந்தபட்ச அளவாக 53,918.02 புள்ளிகள் வரை சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 109.40 புள்ளிகள் (0.67%) சரிந்து 16,301.85-இல் நிலைபெற்றது.

உலக சந்தை: இதர ஆசிய சந்தைகளான டோக்கியோ, சியோல் சரிவுடனும், ஷாங்காய் ஏற்றத்துடனும் வா்த்தகத்தை நிறைவு செய்தன. ஹாங்காங் சந்தைகளுக்கு விடுமுறையாக இருந்தது. ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் நண்பகல் வரை சரிவுடனே காணப்பட்டது.

4% சரிந்த ரிலையன்ஸ் பங்குகள்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்யவில்லை. இதனால், திங்கள்கிழமை வா்த்தகத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 3.97 சதவீதம் குறைந்து 2,517.15-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் இடையே ஒரு கட்டத்தில் இந்நிறுவனப் பங்கின் விலை 4.35 சதவீதம் குறைந்து ரூ.5,507.10-க்கு வா்த்தகமானது.

தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவனப் பங்கின் விலை 4.29 சதவீதம் சரிந்து ரூ.2,508-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com