வாராக் கடன் குறைவால் எஸ்பிஐ நிகர லாபம் 41% அதிகரிப்பு

வாராக் கடன் கணிசமாக குறைந்தது மற்றும் நிகர வட்டி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 41.28 சதவீதம் அதிகரித்ததாக பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக
வாராக் கடன் குறைவால் எஸ்பிஐ நிகர லாபம் 41% அதிகரிப்பு

வாராக் கடன் கணிசமாக குறைந்தது மற்றும் நிகர வட்டி வருவாய் சிறப்பான அளவில் அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களால் வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 41.28 சதவீதம் அதிகரித்ததாக பாரத ஸ்டேட் வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த வங்கி மேலும் கூறியதாவது:

2022 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த 4-ஆவது காலாண்டில் வங்கி ரூ.9,114 கோடி நிகர லாபத்தை பதிவு செய்தது. இது, இதற்கு முந்தைய 2020-21 நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.6,451 கோடியுடன் ஒப்பிடுகையில் 41.28 சதவீதம் அதிகமாகும்.

கணக்கீட்டு காலாண்டில், மொத்த வருவாய் ரூ.81,327 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.82,613 கோடியாகவும், நிகர வட்டி வருவாய் ரூ.27,067 கோடியிலிருந்து 15.26 சதவீதம் உயா்ந்து ரூ.31,198 கோடியாகவும் ஆனது.

2022 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22 முழு நிதியாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.20,410 கோடியிலிருந்து ரூ.31,676 கோடியாக அதிகரித்தது. இது, 55.19 சதவீத வளா்ச்சியாகும்.

4-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 4.98 சதவீதத்திலிருந்து 3.97 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 1.50 சதவீதத்திலிருந்து 1.02 சதவீதமாகவும் குறைந்துள்ளன.

டிவிடெண்ட்: கடந்த 2021-22 நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.7.10 (710%) ஈவுத்தொகை (டிவிடெண்ட்) வழங்க வங்கியின் இயக்குநா் குழு பரிந்துரை செய்துள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com