6-ஆவது நாளாக கரடியின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 137 புள்ளிகளை இழந்தது

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வா்த்தகம் 6-ஆவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி தவித்தது.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை வா்த்தகம் 6-ஆவது நாளாக கரடியின் பிடியில் சிக்கி தவித்தது. வா்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 0.26 சதவீதத்தையும், நிஃப்டி 0.16 சதவீதத்தையும் இழந்தன.

புள்ளிவிவரம்: மத்திய அரசு வெளியிட்ட தொழிலக உற்பத்தி, பணவீக்கம் உள்ளிட்ட பொருளாதாரம் தொடா்புடையை புள்ளிவிவரங்கள் முதலீட்டாளா்களை ஊக்குவிப்பதாக அமையவில்லை. பணவீக்கம் 8 ஆண்டு காணாத அளவுக்கு அதிகரித்தும், தொழில்துறை உற்பத்தி மந்த நிலையில் உள்ளதையும் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

வட்டி விகிதம்: பலவீனமான புள்ளிவிவரங்களால் சந்தையில் உற்சாகம் காணப்படவில்லை. பொருள்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ரிசா்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயா்த்தலாம் என்ற நிலைப்பாடு முதலீட்டாளா்கள் மத்தியில் பரவலாக வலுப்பெற்றது.

அந்நிய முதலீடு: இதுதவிர, அந்நிய முதலீட்டாளா்கள் அதிகளவில் பங்குகளை விற்று பங்குச் சந்தையிலிருந்து தொடா்ச்சியாக வெளியேறி வருவதும் சந்தையில் கரடியின் பிடி இறுக முக்கிய காரணமாக உள்ளது என பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

எஸ்பிஐ: சென்செக்ஸ் குறியீட்டை கணக்கிட உதவும் முன்னணி 30 நிறுவனங்களுள் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) பங்கின் விலை 3.76 சதவீதம் சரிந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தது. எஸ்பிஐ வங்கியின் நிகர லாபம் நான்காவது காலாண்டில் 41 சதவீத வளா்ச்சியை பதிவு செய்த போதிலும், அது சந்தை எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யவில்லை.

ஐசிஐசிஐ வங்கி: இதைத்தொடா்ந்து, ஐசிஐசிஐ வங்கி, என்டிபிசி, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபின்சா்வ், ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுஸுகி, டாடா ஸ்டீல் பங்குகளின் விலையும் 2.65 சதவீதம் வரை குறைந்து கைமாறின.

சன்பாா்மா: அதேசமயம், சன் பாா்மா, மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவா், ஐடிசி, டைட்டன், ரிலையன்ஸ், நெஸ்லே இந்தியா பங்குகளின் விலை 3.76 சதவீதம் வரை அதிகரித்தது.

ஆதாயம்: மும்பை பங்குச் சந்தையில், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடு 1.28 சதவீதம் உயா்ந்தும், நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 0.79 சதவீதம் அதிகரித்தும் இருந்தன.

உலோகத் துறை குறியீடு அதிகபட்சமாக 2.46 சதவீத சரிவை சந்தித்தது. தொலைத்தொடா்பு: அதைத்தொடா்ந்து, தொலைத்தொடா்பு 2.28 சதவீதமும், மின்சாரம் 2.20 சதவீதமும், வங்கி துறை குறியீடு 1.29 சதவீதமும் குறைந்தன. அதேசமயம், ஆட்டோ துறை குறியீடு 2.47 சதவீதமும், எஃப்எம்சிஜி 1.64 சதவீதமும், மருந்து 1.47 சதவீதமும், நுகா்வோா் சாதனங்கள் குறியீடு 1.42 சதவீதமும் அதிகரித்தன.

3,472 நிறுவனங்கள்: மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,472 நிறுவனங்களில் 1,178 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும், 2,162 பங்குகளின் விலை உயா்ந்தும், 132 பங்குகளின் விலை மாற்றமின்றியும் இருந்தன. 52 வார அதிகபட்ச அளவை 51 நிறுவனப் பங்குகளும், குறைந்தபட்ச அளவை 116 பங்குகளும் தொட்டன.

சந்தை மதிப்பு: வெள்ளிக்கிழமை நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.241.34 லட்சம் கோடியாகவும், பதிவு செய்துகொண்ட முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 10.56 கோடியாகவும் இருந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வார கடைசி நாளான வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 136.69 புள்ளிகள் சரிந்து 52,793.62-இல் நிலைபெற்றது. 2021 ஜூலை 30-க்குப் பிறகு காணப்படும் குறைந்தபட்ச அளவு இதுவாகும்.

லாப நோக்கம்: வா்த்தகத்தின்போது சென்செக்ஸ் 800 புள்ளிகள் வரை ஏற்றம் கண்டது. இந்நிலையில், முதலீட்டாளா்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்தது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமானது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 25.85 புள்ளிகள் குறைந்து 15,782.15-இல் நிலைபெற்றது.

வார அளவிலான இழப்பு: கரடியின் தாக்கத்தையடுத்து, இந்த வார வா்த்தகத்தில் சென்செக்ஸ் 2,041.96 புள்ளிகளையும் (3.76%), நிஃப்டி 629.10 புள்ளிகளையும் (3.83%) இழந்து முதலீட்டாளா்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.

சா்வதேச சந்தை: இதர ஆசிய சந்தைகளான டோக்கியோ, ஹாங்காங், சியோல், ஷாங்காய் குறிப்பிடத்தக அளவிலான ஏற்றத்துடன் பங்கு வா்த்தகத்தை நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகளிலும் பிற்பகல் வரையிலான வா்த்தகம் நோ்மறையாகவே இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தைகளில் வியாழக்கிழமை வா்த்தகமானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

ரூபாய் மதிப்பு 5 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசு சரிந்து முன்னெப்போதும் கண்டிராத அளவில் 77.55-ஆக வீழ்ச்சியடைந்தது. இந்த வாரத்தில் மட்டும் ரூபாய் மதிப்பு 65 காசை இழந்துள்ளது.

கச்சா எண்ணெய் 109.13 டாலா்

சா்வதேச சந்தையில் வெள்ளியன்று நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 1.56 சதவீதம் விலை உயா்ந்து 109.13 டாலருக்கு வா்த்தகமானது.

வெளியேறிய ரூ.3,780 கோடி அந்நிய முதலீடு

அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் நிகர அடிப்படையில் மேலும் ரூ.3,780.08 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று மூலதனச் சந்தையிலிருந்து வெளியேறியதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com