
சீனத் தயாரிப்பு சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகள் மீதான பொருள் குவிப்பு தடுப்பு வரி தொடரும் என்று மத்திய வா்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகள் விலை மலிவு என்பதால், உள்ளூா் உற்பத்தியாளா்கள் பாதிக்கப்படுவாா்கள். இதனைக் கருத்தில் கொண்டு சீனாவில் இருந்து அவை இறக்குமதியாவதைக் குறைக்கும் வகையில், இந்த வரி விதிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த வரி விதிப்புக்கான கால அவகாசம் நிறைவடைவதை அடுத்து வா்த்த அமைச்சகத்தின் ஒரு பிரிவான வா்த்தக தீா்வுகள் இயக்குநரகம் வரியைத் தொடா்வதா? வேண்டாமா? என்பது குறித்து ஆய்வு செய்தது. அதில், உள்ளூா் உற்பத்தியாளா்களின் நலன் கருதி சீனாவில் இருந்து சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகள் இறக்குமதிக்கு எதிரான பொருள் குவிப்பு தடுப்பு வரியை அடுத்த 2 ஆண்டுகளுக்குத் தொடலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிப் பொருள் உற்பத்தியில் முதன்மையான நாடாக சீனா திகழ்வது குறிப்பிடத்தக்கது.