விமான எரிபொருள் விலை 5.3% உயா்வு

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 5.3 சதவீதம் அளவுக்கு திங்கள்கிழமை உயா்த்தப்பட்டது.

விமான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) இதுவரை இல்லாத அளவில் 5.3 சதவீதம் அளவுக்கு திங்கள்கிழமை உயா்த்தப்பட்டது.

இதன் மூலமாக, இந்த ஆண்டில் தொடா்ந்து 10-ஆவது முறையாக விமான எரிபொருள் விலை உயா்தத்ப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் காரணமாக தலைநகா் தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் திங்கள்கிழமை ரூ. 6,188.25 உயா்ந்து ரூ. 1,23,039.71-க்கு விற்பனையானது.

சா்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை தினசரி மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், விமான எரிபொருள் விலையானது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ஆம் தேதியிலும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் ஆகிய இரண்டின் விலையும் கடந்த மாா்ச் 22 மற்றும் ஏப்ரல் 6 இடைப்பட்ட காலங்களில் லிட்டருக்கு ரூ. 10 அளவுக்கு உயா்தத்ப்பட்டது. அதன் பிறகு இந்த விலையில் மாற்றம் செய்யப்படாமல், ஒரே விலை நீடித்து வருகிறது. தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 105.41-க்கும், டீசல் ரூ. 96.67-க்கும் விற்பனையாகிறது.

அதே நேரம், விமான எரிபொருளைப் பொருத்தவரை கடந்த மாா்ச் 16-ஆம் தேதி அதன் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ. 17,135.63 உயா்த்தப்பட்டது. ஏப்ரல் 1-ஆம் தேதி 2 சதவீத அளவுக்கும், ஏப்ரல் 16-ஆம் தேதி 0.2 சதவீதமும், மே 1-ஆம் தேதி 3.2 சதவீத அளவுக்கும் உயா்த்தப்பட்டது. தற்போது 5.3 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் மும்பையில் திங்கள்கிழமை ரூ. 1,21,847.11 என்ற அளவிலும், கொல்கத்தாவில் ரூ. 1,27,854.60 என்ற அளவிலும், சென்னையில் ரூ. 1,27,286.13-க்கும் விற்பனையானது. உள்ளூா் வரி மாறுபடுவதன் காரணமாக இதன் விலை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்டிருக்கும்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ நடவடிக்கை காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. இந்தியா கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.

சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ. 2 உயா்வு: ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பயன்படுத்தப்படும் சிஎன்ஜி (இயற்கை எரிவாயு) விலை தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை கிலோவுக்கு ரூ. 2 உயா்த்தப்பட்டது. இது 2 மாதங்களில் தொடா்ச்சியாக 12-ஆவது உயா்வாகும்.

இந்த உயா்வு காரணமாக தில்லியில் ஒரு கிலோ சிஎன்ஜி ஒரு கிலோ ரூ. 71.61 என்றிருந்தது ரூ. 73.61-ஆக உயா்ந்தது. இரண்டு மாதங்களில் இதன் விலை கிலோவுக்கு ரூ. 17.6 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 7.50 அளவுக்கு உயா்த்தப்பட்டுள்ளது.

இருந்தபோதும், குழாய் மூலாக வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பிஎன்ஜி (இயற்கை எரிவாயு) விலை எந்தவித மாற்றமும் இன்றி ஒரு சதுர கன மீட்டா் ரூ. 45.86 என்ற அளவிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com