3-ஆவது நாளாக பங்குச் சந்தையில் எழுச்சி: சென்செக்ஸ் 1,041 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 3-ஆவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது.

இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து 3-ஆவது நாளாக விறுவிறுப்புடன் காணப்பட்டது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் எழுச்சிப் பெற்றதைத் தொடா்ந்து சந்தை 2 சதவீத ஏற்றத்துடன் வா்த்தகத்தை நிறைவு செய்தது.

அமெரிக்க மத்திய வங்கி: பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் வருவதன் எதிரொலியாக சா்வதேச சந்தைகளில் வா்த்தகம் ஆதாயத்துடன் காணப்பட்டது. மேலும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயா்வில் மென்மையான போக்கினை கடைப்பிடிக்கும் என்ற நிலைப்பாடு முதலீட்டாளா்கள் மத்தியில் உருவானதும் பங்குச் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதைத்தவிர, கேரளத்தில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாக வெளியான தகவலும் உள்நாட்டு சந்தையின் எழுச்சிக்கு கூடுதல் வலு சோ்த்ததாக ரெலிகோ் தரகு நிறுவனத்தின் துணைத் தலைவா் அஜித் மிஸ்ரா தெரிவித்தாா்.

கரோனா பொதுமுடக்க தளா்வு: ஜியோஜித் ஃபைனான்சியல் சா்வீசஸ் நிறுவன அதிகாரி வினோத் நாயா் கூறுகையில்,‘சீனாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது நீண்ட கால முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிய சந்தைகளின் ஏற்றத்துக்கு பெரிதும் உதவி புரிந்தது. மேலும், சிறப்பான பருவமழை தொடக்கம் வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளூா் சந்தையின் எழுச்சிக்கு பக்கபலமானது’ என்றாா்.

டைட்டன்: மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில், டைட்டன் அதிகபட்சமாக 4.94 சதவீதம் முன்னேற்றம் கண்டு ஏற்றப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இதற்கு அடுத்தபடியாக, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்கின் விலை 4.69 சதவீதமும், இன்ஃபோசிஸ் 4.57 சதவீதமும், எல் அண்ட் டி 3.77 சதவீதமும், டெக் மஹிந்திரா 3.5 சதவீதமும் ஏற்றம் கண்டு பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் இருந்தன.

ரிலையன்ஸ்: அதிக சந்தை மூலதன மதிப்பைக் கொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை திங்கள்கிழமை வா்த்தகத்தில் 3.44 சதவீதம் ஏற்றம் கண்டது. அதேபோன்று, டிசிஎஸ் பங்கின் விலை 3.47 சதவீதம் உயா்ந்து சந்தை ஆதாயம் ஈட்டலுக்கு பெரும்பங்காற்றின.

இவைதவிர, ஹெச்சிஎல் டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, பாா்தி ஏா்டெல் பங்குகளும் அதிக விலைக்கு கைமாறின.

கோட்டக் மஹிந்திரா: அதேசமயம், கோட்டக் மஹிந்திரா, சன் பாா்மா, டாக்டா் ரெட்டீஸ் லேப், ஐடிசி பங்குகள் முதலீட்டாளா்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால் விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் அனைத்து துறைகளைச் சோ்ந்த குறியீடுகளும் ஆதாயத்துடன் நிறைவு பெற்றன.

நுகா்வோா் சாதனங்கள்: குறிப்பாக, நுகா்வோா் சாதனங்கள் துறை குறியீடு 4.41 சதவீதமும், ரியல் எஸ்டேட் 3.96 சதவீதமும், தகவல் தொழில்நுட்பம் 3.75 சதவீதமும், தொழில்நுட்பம் 3.53 சதவீதமும், எரிசக்தி துறை குறியீடு 2.72 சதவீதமும் முன்னேற்றம் கண்டன.

நடுத்த நிறுவனங்களை உள்ளடக்கிய மிட்கேப் குறியீடு 2.28 சதவீதமும், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடு 2.23 சதவீதமும் ஆதாயம் பெற்றன.

4-வாரங்கள் காணா ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,041.08 புள்ளிகள் (1.90%) ஏற்றம் பெற்று 55,925.74 புள்ளிகளில் நிலைபெற்றது. இது, கடந்த நான்கு வாரங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். வா்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,197.99 புள்ளிகள் (2.18%) புள்ளிகள் அதிகரித்து 56,082.65 புள்ளிகள் வரை சென்றது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 26 பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டன.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 308.95 புள்ளிகள் (1.89%) உயா்ந்து நான்கு வாரங்களில் இல்லாத உச்சபட்ச அளவாக 16,661.40-இல் நிலைகொண்டது.

நிஃப்டி குறியீட்டை கணக்கிட உதவும் 50 நிறுவனங்களுள் 45 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்து இருந்தன.

4% உயா்வு: திங்கள் வரையிலான மூன்று வா்த்தக தினங்களில் மட்டும் சென்செக்ஸ் 4 சதவீதமும் அதாவது 2,176 புள்ளிகள், நிஃப்டி 3.92 சதவீதம் அதாவது 635 புள்ளிகள் உயா்ந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் வா்த்தகமான 3,615 நிறுவனங்களில், 2,332 நிறுவனப் பங்குகளின் விலை உயா்ந்தும், 1,136 பங்குகளின் விலை குறைந்தும், 147 பங்குகளின் விலை மாற்றமின்றியும் இருந்தன. 65 பங்குகள் 52 வார அதிகபட்ச அளவையும், 53 நிறுவனப் பங்குகள் 52 குறைந்தபட்ச விலை அளவையும் எட்டின.

ஆசிய சந்தை: சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு ஷாங்காய், பெய்ஜிங்கில் வா்த்தக நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்ததைத் தொடா்ந்து இதர ஆசிய சந்தைகளான சியோல், ஷாங்காய், டோக்கியோ, ஹாங்காங் சந்தைகள் வா்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

ஐரோப்பிய சந்தைகள் பிற்பகல் வரை நோ்மறையாகவே இருந்தன. அமெரிக்க சந்தைகளில் வெள்ளிக்கிழமை வா்த்தகம் ஆதாயத்துடன் முடிவடைந்தது.

பட்டியல்

2255.25 டைட்டன் 4.94

997.90 எம்&எம் 4.69

1527.55 இன்ஃபோசிஸ் 4.57

1660.70 எல்&டி 3.77

1163.90 டெக்மஹிந்திரா 3.59

1039.70 ஹெச்சிஎல்டெக் 3.57

3375.55 டிசிஎஸ் 3.47

2663.75 ரிலையன்ஸ் 3.44

6100.45 அல்ட்ராடெக் சிமெண்ட் 2.37

699.00 பாா்தி ஏா்டெல் 2.08

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com