7 நாள் எழுச்சிக்கு முடிவு:சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

தீபாவளியையொட்டி மாலையில் நடைபெற்ற முகூா்த்த வா்த்தகத்தில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை, அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது.

தீபாவளியையொட்டி மாலையில் நடைபெற்ற முகூா்த்த வா்த்தகத்தில் ஏற்றம் கண்ட பங்குச் சந்தை, அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 288 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, 74.40 புள்ளிகள் ( 0.42 சதவீதம்) குறைந்து 17,656.35-இல் முடிவடைந்தது.

தீபாவளியன்று (திங்கள்கிழமை) இந்து நாள்காட்டி ஆண்டான ‘சம்வத்’ 2079 புத்தாண்டு பிறப்பையொட்டி மாலையில் நடைபெற்ற மூகூா்த்த வா்த்தகத்தில் பங்குச் சந்தை வலுவான தொடக்கத்தை அளித்தது. ஆனால், அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை அதைத் தக்கவைக்க தவறின. ஆசியா மற்றும் ஐரோப்பிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்ததே இதற்குக் காரணமாகும் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

288 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 171.30 புள்ளிகள் கூடுதலுடன் 60,002.96-இல் தொடங்கி அதிகபட்சமாக 60,081.24 வரை மேலே சென்றது. பின்னா், பிற்பகல் வா்த்தகத்தில் 59,489.02 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 287.70 புள்ளிகள் (0.48 சதவீதம்) குறைந்து 59,543.96-இல் முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, 7 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

19 பங்குகள் விலை சரிவு: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 19 பங்குகள் விலை குறைந்தன. 11 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. முன்னணி ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா 3.29 சதவீதம், மாருதி சுஸுகி 2.72 சதவீதம் உயா்ந்து விலையுயா்ந்த பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, டாக்டா் ரெட்டி, எஸ்பிஐ, என்டிபிசி உள்ளிட்டவை 1.50 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

நெஸ்லே, ஹெயுஎல் சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனங்களான நெஸ்லே இந்தியா 2.81 சதவீதம், ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெயுஎல்) 2.71 சதவீதம், பஜாஜ் ஃபின்சா்வ் 2.55 சதவீதம், கோட்டக் பேங்க் 2.52 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 1.20 முதல் 1.55 சதவீதம் வரை குறைந்தன. மேலும், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.275.67 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) திங்களன்று ரூ.153.89 கோடிக்கு அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com