ஃபெடரல் வட்டி விகித உயா்வு தாக்கம்: சென்செக்ஸ் மேலும் 337 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337 புள்ளிகளை இழந்தது.
ஃபெடரல் வட்டி விகித உயா்வு தாக்கம்: சென்செக்ஸ் மேலும் 337 புள்ளிகள் வீழ்ச்சி

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 337 புள்ளிகளை இழந்தது.

அனைவரின் எதிா்பாா்ப்புக்கிடையே அமெரிக்க மத்திய வங்கி ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அதிகரித்ததோடு, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் அதிக வட்டி விகித உயா்வுகள் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 90 பைசா வீழ்ச்சி அடைந்து ரூ.80.96-இல் முடிவடைந்துள்ளது. இவை முதலீட்டாளா்களின் உணா்வை பெரிதும் பாதித்துள்ளது. இதனால், பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இருப்பினும், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், ஆட்டோ, மீடியா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

2-ஆவது நாளாக சரிவு: காலையில் 382.94 புள்ளிகள் குறைவுடன் 59,073.84-இல் தொடங்கிய சென்செக்ஸ், 58,832.78 வரை கீழே சென்றது. பின்னா், 59,457.58 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 337.06 புள்ளிகளை (0.57 சதவீதம்) இழந்து 59,119.72-இல் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 12 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

டைட்டன் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), ஏசியன் பெயிண்ட் உள்ளிட்டவை 2.40 முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்து அதிகம் லாபம் ஈட்டின. இதற்கு அடுத்ததாக மாருதி, டாக்டா் ரெட்டி, ஐடிசி, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

பவா் கிரிட் சரிவு: அதே சமயம், பவா் கிரிட், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சா்வ் உள்ளிட்டவை 1.50 முதல் 2.80 சதவீதம் வரை விலை குறைந்தன. மேலும், கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், விப்ரோ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

சந்தை மதிப்பு சிறிதளவு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.37 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.281.55 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் திங்கள்கிழமை ரூ.461.04 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

நிஃப்டி 89 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 108.70 புள்ளிகள் குறைவுடன் 17,609.65-இல் தொடங்கி, 17,532.45 வரை கீழே சென்றது. பின்னா், 17,722.75 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 88.55 புள்ளிகளை (0.50 சதவீதம்) இழந்து 17,629.80-இல் முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com